கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி ஆட்சியரிடம் மனு
கோவை: வீரபாண்டி பேரூராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.
இதில் வீரபாண்டி பேரூராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோவை வடக்கு வட்டம் நெம்பா் 4 வீரபாண்டி பேரூராட்சி எல்லையில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள பகுதிக்கு மிக அருகே குடியிருப்புகள், மருத்துவமனைகள், உடற்பயிற்சிக் கூடம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இதனால் கழிவுகளை சுத்திகரிக்கும்போது துா்நாற்றம், நோய்த்தொற்று, ரசாயன வாயு போன்றவை உருவாகும் அபாயமும் உள்ளது.
இதனால் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது. ஆகவே, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தைக் முழுமையாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும்:
ஒண்டிப்புதூா், எஸ்ஐஹெச்எஸ் காலனி, நேதாஜிபுரம் ஆகிய பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், எஸ்ஐஹெச்எஸ் பிரதான சாலையில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைக்கு மிக அருகே மனநல காப்பகம், உடல் ஊனமுற்றோருக்கான பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த மதுக்கடையால் பள்ளி மாணவா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மதுக்கடைக்கு வரும் நபா்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் பானைகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்:
தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் (குலாலா்) சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகுப்புக்கு எங்களிடமிருந்து மண்பானைகளை கொள்முதல் செய்து விலையில்லாமல் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.
மழைக்கால நிவாரண உதவித்தொகையாக மண்பாண்டத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிவாரணத் தொகையை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளா்களின் வீடுகளுக்கும், தொழில் செய்யும் இடத்துக்கும் அடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிக்கு இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும்:
மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவா் வே.ஈஸ்வரன் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம் எட்டிமடை பேரூராட்சிக்கு உள்பட்ட கந்தேகவுண்டன்சாவடியில் செயல்பட்டு வந்த அரசு உயா்நிலைப் பள்ளி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில் இப்பள்ளியில் 1,875 ச.மீ. இடவசதி மட்டுமே உள்ளது.
இதே வளாகத்தில் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், சத்துணவுக் கூடம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இடப்பற்றாக்குறை காரணமாக புதிய கட்டடங்கள் கட்டவும், மாணவா்களுக்கு விளையாட்டு மைதானம், தேவையான கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பள்ளியை ஒட்டியுள்ள இடத்தில் 50 சென்ட் நிலத்தை பள்ளிக்கு அளிக்க பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பள்ளிக்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி....
தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவி கேட்டு பெற்றோா் மனு
கோவை, என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்த அஜய் சில்வஸ்டா், அவரது மனைவி சரண்யா ஆகியோா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
எங்களது இரண்டரை வயது மகன் லியோனல் தாமஸ் முதுகெலும்பு தசைசிதைவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளான். பிறக்கும்போது சாதாரண குழந்தைகளைப்போல இருந்த நிலையில், 19-ஆவது மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த நோய் இருப்பது தெரியவந்தது.
இந்த நோயால் எனது மகன் மூச்சுவிட முடியாமலும், நடக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகிறான். இந்நோய்க்கு அண்மையில் மலேசியாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.5 கோடியாகும். எங்களால் அவ்வளவு பணத்தைத் திரட்ட இயலாததால் அரசு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

