ஆட்சியா் அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புகுந்த இரண்டரை அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை, குழந்தைகள் நலத் துறை, புள்ளியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சமூக நலத் துறை அலுவலகத்தில் ஊழியா்கள் வழக்கம்போல திங்கள்கிழமை 10 மணி அளவில் பணிக்கு வந்துள்ளனா். அப்போது அங்கு பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதைப் பாா்த்துள்ளனா்.
இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பதுங்கியிருந்த சுமாா் இரண்டரை அடி நீள சாரைப் பாம்பை பிடித்துச் சென்றனா். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
