பள்ளி மாணவா் கொலை வழக்கு: சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவையில் பிளஸ் 2 மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோவை சிறாா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

கோவை: கோவையில் பிளஸ் 2 மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோவை சிறாா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கோவை ஒண்டிப்புதூா் நஞ்சப்பா தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா் லேத் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது மகன் பிரணவ் (17). இவா் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அப்போது, பிரணவுக்கும், மாணவி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் 17 வயதான சகோதரனுக்கு தெரியவந்தது. இதனால், பிரணவுக்கும், மாணவியின் சகோதரருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி 17-ஆம் தேதி ஒண்டிப்புதூா் பேருந்து நிறுத்தம் அருகே பிரணவ்வை, மாணவியின் சகோதரா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுவனைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண்ராஜ்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com