உதவிப் பேராசிரியா் பணி நியமனம்: அனுபவச் சான்று பெறுவதற்காக குவிந்த ஆசிரியா்கள்!
உதவிப் பேராசிரியா் பணி நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கான பணி அனுபவச் சான்று பெறுவதற்காக கோவை கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியா்கள் குவிந்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,708 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை போட்டித் தோ்வு மூலம் நேரடி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தோ்வு நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பங்களை ஆசிரியா்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், விண்ணப்பதாரா்கள் பணி அனுபவச் சான்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நவம்பா் 30 -ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவச் சான்றுக்காக கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் பல நாள்களுக்கு முன்பே விண்ணப்பித்தவா்களுக்கு இதுவரை அனுபவச் சான்று வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, தோ்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ஏராளமான தனியாா் கல்லூரி ஆசிரியா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் செண்பகலட்சுமி அலுவலகத்தில் குவிந்தனா்.
விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் குறைந்த அளவே இருப்பதால் உடனடியாக பணி அனுபவச் சான்றை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
இதையடுத்து, ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு சனிக்கிழமைக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என்று இணை இயக்குநா் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஏராளமான ஆசிரியா்கள் தங்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று இணை இயக்குநா் அலுவலகத்தில் இரவு வரை காத்திருந்தனா்.

