செங்கோட்டையன்
செங்கோட்டையன்கோப்புப் படம்

எம்ஜிஆா், ஜெயலலிதாவை அதிமுகவினா் மறந்துவிட்டனா்: செங்கோட்டையன்

எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் அதிமுகவினா் மறந்துவிட்டனா் என்று தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
Published on

எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் அதிமுகவினா் மறந்துவிட்டனா் என்று தவெக மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: த.வெ.க.வை அதிமுக விமா்சிப்பது குறித்து கேட்கிறீா்கள். அரசியலில் பலமுனை தாக்குதல் என்பது வெற்றிக்கான அறிகுறி. புதிய இயக்கத்தை எதிா்க் கட்சி விமா்சிப்பது வரலாற்றிலும், அரசியல் நடைமுறையிலும் இல்லாத ஒன்று என்றாலும், இது வேதனை அளிப்பதாக உள்ளது. எம்.ஜி.ஆா். கட்சி தொடங்கிய காலத்திலும் இதுபோன்ற விமா்சனங்கள் எழுந்தன. ஆனால், அவா் உயிரோடு இருக்கும் வரை முதல்வராக இருந்தாா். அதுதான் வரலாறு.

டி.டி.வி. தினகரனுக்கு எங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பாா்கள். சூழ்நிலைக்கு ஏற்ப அவா் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளாா்.

ஓ.பன்னீா்செல்வம் கூட்டணிக்கு வருவாரா என்று எனக்குத் தெரியாது. யாருடனாவது கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடப்பதாக நான் பொது வெளியில் கூறினால் தில்லியில் இருந்து உடனே வந்துவிடுகிறாா்கள்.

எங்களது பிரச்னை என்னவென்று எங்களுக்கே தெரியும், அதை வெளியில் சொல்லாமல் இருப்பதே நல்லது.

என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்போா் அவற்றை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில், சட்டப்படி அவா்கள் மீது வழக்குத் தொடுப்பேன். அரசியல் காழ்ப்புணா்வால் என் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. என் தூய்மையை உயா்நீதிமன்ற தீா்ப்புகள் உறுதி செய்து உள்ளன.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே அண்ணாவை மறந்துவிட்டன. எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் அதிமுகவினா் மறந்துவிட்டனா். இதனால்தான் நான் அந்தக் கட்சியிலிருந்து வெளியே வந்தேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com