அன்று மாமனார்; இன்று மருமகன்!:42 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் செங்கொடி

 கோவை, மே 16: 1967-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் முதல் வெற்றியைக் கொடுத்தார். அவரது மருமகனும் கட்சியி
Updated on
2 min read

 கோவை, மே 16: 1967-ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் கே.ரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் முதல் வெற்றியைக் கொடுத்தார். அவரது மருமகனும் கட்சியின் மாவட்டச் செயலருமான பி.ஆர்.நடராஜன் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 2-வது வெற்றியைக் கொடுத்துள்ளார்.

 கோவை மக்களவைத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 5 முறை, இந்திய கம்யூனிஸ்ட் 4 முறை, திமுக, பாஜக தலா 2 முறை, மார்க்சிஸ்ட் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

 67-ல் முதல் வெற்றி...: 1967 மக்களவைத் தேர்தலில் வெற்றிக் கணக்கைத் துவக்கினார் ரமணி. இருப்பினும் அதன் பிறகு கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற முடியவில்லை. 1971 தேர்தலில் ரமணி 3-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

 அதன் பிறகு 1984 மற்றும் 1989 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ஆர்.உமாநாத் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1996-ல் தற்போதைய வெற்றி வேட்பாளரான பி.ஆர்.நடராஜனால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

 1998, 1999, 2004 தேர்தல்களில் கோவை மக்களவைத் தொகுதி, மார்க்சிஸ்ட் கட்சியின் தோழமைக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டது. 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு மதுரை, கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

 கூட்டணி பலம்: அதிமுகவுக்கு வாய்ப்புள்ள தொகுதியாக இருந்தாலும், இத் தொகுதி மார்க்சிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. பல்லடம், சிங்காநல்லூர், கோவை மேற்கு ஆகிய பேரவைத் தொகுதிகள் அதிமுக வசம் இருப்பது கூடுதல் பலமாகக் கருதப்பட்டது.

 கூட்டணி பலம், மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் இருக்கும் அடித்தளம், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, தொழில் துறை மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு, களத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸில் இருக்கும் கோஷ்டி பூசல் ஆகியனதான் நடராஜனுக்கு வெற்றியைச் சாதகமாக்கியுள்ளன.

 முந்தைய தேர்தலில்...: 2004 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன், 1 லட்சத்து 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் நின்றன.

 2009 தேர்தலில் அதிமுக, சிபிஎம், சிபிஐ, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் அணி சேர்ந்தன. இருப்பினும் வாக்குவித்தியாசம் 38 ஆயிரத்து 664 தான். இதற்கு முக்கியக் காரணம் புதிய அரசியல் கட்சியாக களம் இறங்கிய கொமுபே, பெரும்பான்மை சமூகத்தவரான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் வாக்குகளைப் பிரித்துவிட்டது. கோவை தொகுதியில் இப் கட்சி 1.28 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 கிரிக்கெட் போட்டியும், சிபிஎம் வெற்றியும்: கிரிக்கெட் ஜூரம் இருப்பதாலோ என்னவோ, சிபிஎம் போட்டியிடுவதை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டனர் அக் கட்சியினர்.

 41 ஆண்டுகளுக்குப் பிறகு நியூலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தி சாதனை படைத்தது இந்தியா. அதேபோல 42 ஆண்டுகளுக்குப் பிறகு (1967-க்குப் பிறகு), கோவை மக்களவையில் வெற்றியைப் பெற்றுள்ளோம் என்கின்றனர் தோழர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com