ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டாப்சிப் யானைகள் முகாமுக்கு கால்நடை மருத்துவர் நியமிக்கப்படுவாரா?

தமிழகத்தின் தலைசிறந்த டாப்சிலிப் கும்கி யானைகள் முகாமுக்கு தனியாக வனக் கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On :16 ஜனவரி 2014, 2:56 am

தமிழகத்தின் தலைசிறந்த டாப்சிலிப் கும்கி யானைகள் முகாமுக்கு தனியாக வனக் கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 தமிழகத்தில் முதுமலை தெப்பக்காடு, ஆனைமலை டாப்சிலிப், கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள யானைகளுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மூன்று இடங்களில் யானைகள் முகாம் இருந்தாலும், முதன்முதலில் டாப்சிலிப்பில்தான் யானைகள் முகாம் அமைக்கப்பட்டது.
 ஆரம்ப காலங்களில் டாப்சிலிப்பில் வெட்டப்படும் மரங்களை இடமாற்றம் செய்வதற்கு, பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டன. வனப்பகுதியில் மரங்கள் வெட்டத் தடை விதிக்கப்பட்ட பிறகு, வனப்பகுதி மேம்பாட்டிற்கும், குறும்பு செய்யும் காட்டு யானைகளை அடக்குவதற்கும், யானைச் சவாரிக்கும் இந்த யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
 டாப்சிலிப்பில் வரகளியாறு, சின்னாறு, கோழிகமுத்தி ஆகிய இடங்களில் யானைகள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு வளர்க்கப்படும் கும்கி யானைகள் தென்னிந்தியாவின் சிறந்த கும்கி யானைகளாக உள்ளன.
 தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் யானை - மனித மோதல் உள்ள இடங்களில் இந்த கும்கி யானைகள் கொண்டுசெல்லப்பட்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் வனப்பகுதி மேம்பாட்டுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
 சமீபத்தில் திருவண்ணாமலை காட்டு யானைகளைப் பிடிக்கும் பணியில் டாப்சிலிப் கும்கி யானை கலீம் ஈடுபடுத்தப்பட்டது. கோவை வளர்ப்பு முகாமில் தற்போது இருக்கும் முக்கிய யானைகள் டாப்சிலிப்பில் வளர்க்கப்பட்டு கோவைக்கு வழங்கப்பட்டவை.
 தற்போது டாப்சிலிப் முகாமில் 20 வளர்ப்பு யானைகள் உள்ளன. சிறந்த கும்கி முகாமாக டாப்சிலிப் இருந்தும், இந்த முகாம் யானைகளுக்கு தனியாக வனக் கால்நடை மருத்துவர் இல்லை. இந்த முகாமில் யானைகளைப் பராமரிக்க யானை மாவுத்தன், கவாடி ஆகியோர் இருந்தும், யானைகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது வனத்துறையினர் அவதிப்படும் நிலை உள்ளது.
 யானைகளுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும்போது மண்டல மருத்துவரான மனோகரனை வனத்துறையினர் தொடர்புகொண்டு, அவர் வந்து சிகிச்சையளிக்கும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அவர் மண்டல மருத்துவராக இருப்பதால், சத்தியமங்கலம், முதுமலை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், அனைத்து நேரங்களிலும் அவர் வருவது இயலாததாக உள்ளது.
 இங்கு தனியாக மருத்துவர் இல்லாததது, மிகப்பெரும் குறையாகவே உள்ளது. முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு தனியாக கால்நடை மருத்துவரை அரசு நியமித்துள்ளது. ஆனால், டாப்சிலிப் முகாமுக்கு மருத்துவரை நியமிக்காமல் உள்ளது.
 மனித - வனவிலங்கு மோதல்: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறையில் யானை - மனித மோதல், மனித - சிறுத்தை மோதல் இருந்துவருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வனத்துறையினர், கால்நடை மருத்துவர் இன்றி தன்னிச்சையாக செயல்படவேண்டியுள்ளது. கூண்டில் சிக்கும் சிறுத்தையை இடமாற்றம் செய்ய மயக்க மருந்து செலுத்தவும் வனத்துறையினர் சிரமப்பட வேண்டியுள்ளது. யானைகளில் உடல்நிலையை மேம்படுத்தவும், அவற்றுக்கு ஓய்வு அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு வனக் கால்நடை மருத்துவரை நியமித்தால் அது அங்குள்ள யானைகளின் மேம்பாட்டுக்கு உதவியாக இருப்பதுடன், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.
 இதுகுறித்து தமிழ்நாடு பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் கூறுகையில், ""டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு தனியாக கால்நடை மருத்துவர் தேவை. இந்தக் காப்பகத்தில் மற்ற வன உயிரினங்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், மனித - வன உயிரின மோதலைத் தடுக்கவும் வனக் கால்நடை மருத்துவரை அரசு நியமிக்க வேண்டும்'' என்றார்.
 ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா கூறுகையில், டாப்சிலிப்பிற்கு வனக் கால்நடை மருத்துவர் தேவை என்று அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.