அழிவின் விளிம்பில்விளிம்பில் மோட்டார் பம்ப் செட் தொழில்!

தொழிலைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவையின் பெருமைகளில் ஒன்றான மோட்டார் பம்ப் செட் தொழில் அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.
Updated on
3 min read

தொழிலைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவையின் பெருமைகளில் ஒன்றான மோட்டார் பம்ப் செட் தொழில் அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.

 வேளாண்மை முக்கியத் தொழிலாக உள்ள தமிழகத்தில், பாசனத்துக்காக நீர் இறைக்கும் இயந்திரங்களை நம்பியிருந்த விவசாயிகளுக்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து அவை இறக்குமதி செய்யப்பட்டன.

 இந்த நிலையில், கோவையில் 1928-ஆம் ஆண்டில் பம்ப் செட் தயாரிக்கும் தொழில் தொடங்கியது. அன்று முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலும் இந்தத் தொழிலில் தேசிய அளவில் கோவை கொடிகட்டிப் பறந்தது. நாட்டின் மொத்த மோட்டார் உற்பத்தியில் 60 சதவீதப் பங்கு வகித்ததுடன் கோவைக்கு தொழில் நகரம் என்ற பெயரையும் இதுவே பெற்றுக் கொடுத்தது.

 ஆண்டொன்றுக்கு குறைந்தது ரூ. 7 ஆயிரம் கோடி முதல் ரூ. 9 ஆயிரம் கோடி வரையிலான வர்த்தகத்தைக் கொண்டிருந்த இந்தத் தொழில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்தது. இப்போது அது கவலை அடையச் செய்யும் விதத்தில் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது என்கிறார் கோவை மாவட்ட மோட்டார் பம்ப் செட் உதிரிப் பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மணிராஜ் .

 கோவையில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு பம்ப் செட் உற்பத்தியாளர்கள், 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள், இந்த நிறுவனங்களுக்கான உதிரிப் பாகங்கள், தயாரிப்போர், பணியாளர்கள் என சுமார் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் இது.

 சுமார் 1,200 அடி ஆழத்தில் இருந்து நீரை எடுத்து வரும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வகையான ஆழ்துளை மோட்டார்கள், ஜெட் வகை பம்ப் செட், மோனோபிளாக் வகை, திறந்தவெளி நீர்மூழ்கி மோட்டார்கள், கம்ப்ரசர்கள், ஆயில் என்ஜின்கள் என பல நூறு வகையான பம்ப் செட், மோட்டார்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

 இருப்பினும், இவற்றுக்கான முக்கிய உதிரிப் பாகங்களான செம்புத் தளவாடங்கள், காயில் கட்டும் வயர், காந்த அலைத் தகடுகள், உருக்கு இரும்பு, துருப்பிடிக்காத இரும்புத் தகடுகள், குழாய்கள் போன்றவை 90 சதவீதம் அளவுக்கு வட மாநிலங்களில் இருந்தே வரவழைக்கப்படுகின்றன.

தொழில் போட்டி: உதிரிப் பாகங்களைத் தயாரித்துக் கொடுத்து வந்த தில்லி, மும்பை, குஜராத் பகுதி தொழில் முனைவோர் கடந்த 10 ஆண்டுகளாக பம்ப் செட் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். கோவையில் பயிற்சி பெற்றுச் சென்றவர்கள் இப்போது கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் தொழிற்சாலைகளை அமைத்து பம்ப் செட் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், கோவைக்கு வந்து கொண்டிருந்த வர்த்தகம் சரிவடையத் தொடங்கியது.

 இப்போது தினசரி சுமார் 25 ஆயிரம் மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்பட்டு, அதில் 70 சதவீதம் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டாலும், வாட் வரி, மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பிற மாநிலத் தயாரிப்புகளுடன் கோவை போட்டியிட முடியாத நிலை உள்ளது.

 ஏற்கெனவே மெல்லக் குறைந்து வந்த வர்த்தகம், 2010-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் வெட்டு, இலவச மின் மோட்டார் திட்டம் அறிவிப்பு, மின் சிக்கனத்துக்கான நட்சத்திரக் குறியீடு அமலாக்கம் போன்றவற்றால் வேகமாகச் சரிவடைந்தது.

 கோவையின் சிறப்புத் தொழில் என்று அழைக்கப்பட்ட இந்தத் தொழிலின் மொத்த வணிகம் 80 சதவீதம் வீழ்ச்சியடைந்து, இப்போது ஆண்டுக்கு சுமார் ரூ. 1,500 கோடி என்ற அளவுக்கு சுருங்கிவிட்டது.

 தினசரி 3 ஷிப்டுகள் இயங்கி வந்த பல நிறுவனங்கள் ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்குவதால், பெரும்பாலான பம்ப் செட் உற்பத்தி நிறுவனங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமார் 50 சதவீத அளவுக்கு ஆள்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

 இந்தத் தொழிலைவிட்டு இதுவரை சுமார் 75 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். 25 சதவீத லேத் பட்டறைகள் காலி செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பயன்படுத்திய இயந்திரங்களுக்கு தகுந்த விலை இல்லாததால் உடைத்து விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார் மணிராஜ்.

தீர்வுதான் என்ன? இந்தத் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள மதிப்புக் கூட்டு வரியை உடனடியாகக் குறைப்பது, அரசு நிறுவனங்கள் யாவும் தங்களுக்குத் தேவையான பம்ப் செட், மோட்டார்களை கோவையில் உள்ள சிறு, குறு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் வகையிலும் உத்தரவிடுவதன் மூலம் அழிவைத் தடுக்க முடியும் என்கின்றனர் தொழில் முனைவோர்.

 மேலும், தொழிலுக்குத் தடையாக உள்ள மூலப் பொருள் திடீர் விலை உயர்வு, மோட்டார் பரிசோதனைக் கூடம், கள்ளச் சந்தையில் விற்பனையாகும் வெளி மாநில மோட்டார்கள் போன்ற பிற பிரச்னைகளையும் களைய வேண்டும் என்கின்றனர்.

 ஃபவுண்டரி தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்களை மத்திய அரசு நிறுவனம் நியாயமான விலையில் வழங்குவதைப்போல உள்ளூரிலேயே மூலப் பொருள் வங்கி திறக்க வேண்டும். தரச் சான்று பெறுவதற்கு கோவை, படேல் சாலையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் விண்ணப்பித்தால் 3 மாதங்களாகின்றன. அதேநேரம் தனியார் நிறுவனத்தில் சான்று பெற ஒரு மாதிரிக்கு (மாடல்) ரூ. 12 ஆயிரம் செலவாகிறது.

 எனவே, 30 ஆண்டுகளுக்கு முன்ப் மாவட்டத் தொழில் மையத்தின் கீழ் செயல்பட்ட மண்டல பொது பரிசோதனை நிலையத்தைச் சீரமைக்க வேண்டும். அதேபோல, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் கண்காட்சிகளில் பங்கேற்று வாய்ப்புகளைப் பெறுவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்கின்றனர்.

 சுமார் ரூ. 3 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் வருவாய் ஈட்டக் கூடியதாக இருந்த இந்தத் தொழில், ஒருகாலத்தில் இளைஞர்களை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால், இப்போதோ இந்தத் தொழிலைவிட்டு வெளியேறுவது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

 படித்த, படிக்காத இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய இந்தத் தொழிலுக்கு, புதிய தொழில் முனைவோர் வருவதும், கோவை பம்ப் செட்டுகள் தேசிய அளவில் பழையபடி 60 சதவீத சந்தையைப் பிடிப்பதும் அரசின் கைகளில் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com