பிஏபி திட்டத்தில் உள்ள அப்பர் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க மின்வாரியத்தினர் மறுப்பதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் பாரம்பரிய உரிமை பறிபோவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தில் 10 அணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு, மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டன.
இத்திட்டத்தில் கிடைக்கும் 50.5 டிஎம்சி நீரில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சியும், கேரளத்துக்கு 19.55 டிஎம்சியும் நீர் பகிர்மானம் செய்து கொள்ள ஒப்பந்தம் உள்ளது. பிஏபி திட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் நீர் பகிர்மானம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வோர் அணையிலிருந்தும் விவசாயத்துக்குப் பங்களிப்பு தர வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தமாகும்.
அப்பர் ஆழியாறில் பிரச்னை:
பிஏபி திட்டத்தில் கட்டப்பட்ட 9 அணைகளுள் அப்பர் ஆழியாறு அணையும் ஒன்றாகும். இந்த அணையில் இருந்தும் விவசாயத்துக்குத் தண்ணீர் வழங்க வேண்டும். இந்நிலையில், 1984-இல் அப்பர் ஆழியாறு அணைக்கு மேல் காடம்பாறை அணை கட்டப்பட்டது.
காடம்பாறை அணையில் மின் உற்பத்தித் திட்டம் துவக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின்படி, காடம்பாறை அணையில் இருந்து மின்னுற்பத்திக்காக எடுக்கப்படும் நீர் அப்பர் ஆழியாறு அணைக்கு வந்துவிடும். மீண்டும் சுழற்சி முறையில் அப்பர் ஆழியாறு அணையிலிருந்து காடம்பாறை அணைக்கு தண்ணீர் உந்தப்படும். வறட்சிக் காலங்களில் ஆழியாறு அணையில் தண்ணீர் குறையும்போது, விவசாயத்துக்காக காடம்பாறை, அப்பர் ஆழியாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
காடம்பாறை அணை கட்டும்போது, விவசாயத்துக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிஏபி திட்டத்தில் 9 அணைகளில் அப்பர் ஆழியாறு அணை தவிர 8 அணைகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும், அப்பர் ஆழியாறு, காடம்பாறை அணைகள் மின்வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. பிஏபி திட்ட அப்பர் ஆழியாறின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் காடம்பாறை அணை கட்டப்பட்டு அங்கு தண்ணீர் தேக்கப்படுவதால் விவசாயத்துக்குத் தண்ணீர் வாங்கிக் கொள்வது விவசாயிகளின் பாரம்பரிய உரிமையாக உள்ளது.
இந்நிலையில், வழக்கமாகப் பெய்யும் மழைப்பொழிவைவிட இந்த ஆண்டு மழை குறைந்துவிட்டதால், பிஏபி திட்ட அணைகளில் நீர் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஆழியாறு அணையில் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது.
பாரம்பரிய உரிமை பறிபோகும் சூழல்:
ஆழியாறு அணை, அப்பர் ஆழியாறு அணைகளைக் கட்டுவதற்கு முன்னரே ஆழியாற்றின் குறுக்கே பல்வேறு தடுப்பணைகளைக் கட்டி விவசாயிகள் பாசனம் செய்துவந்தனர். அணை கட்டும்போது, ஆழியாற்றில் விவசாயிகளுக்கு உள்ள பாரம்பரிய உரிமை பறிக்கப்படாது என்றும், ஆண்டு முழுவதும் எப்போதும் போல நீர் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அணை கட்டுவதற்கு முன்பே பாசனம் செய்த 6,400 ஏக்கர் நிலங்களுக்கு பழைய ஆயக்கட்டு என பெயர் வைத்து அவர்களுக்கு தமிழக அரசு உரிமை தந்தது.
அணை கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு வரை பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைந்து ஆழியாறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், இரண்டாம் போகப் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் சார்பிலும், விவசாயிகள் சார்பிலும், காடம்பாறை, அப்பர் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க மின்வாரியத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மின்வாரியத்தினர் தண்ணீர் திறக்க மறுத்து விட்டனர்.
பொதுப் பணித் துறை சார்பில் மின்வாரியத்துக்கு 4 முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காடம்பாறை அணையின் மொத்தக் கொள்ளவான 1,089 மில்லியன் கன அடியில் திங்கள்கிழமை நிலவரப்படி, 1,056.3 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அப்பர் ஆழியாறு அணையின் மொத்த கொள்ளவான 938 மில்லியன் கன அடியில் 443 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இரண்டு அணைகளிலும் சேர்த்து 1,499 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
இருந்தபோதும், நீரை வைத்துக் கொண்டு விவசாயத்துக்கு வழங்காமல் இருப்பது விவசாயிகளின் பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆழியாறு பாசன விவசாயிகள் கூறியதாவது:
பிஏபி திட்டத்தில் அணைகள் கட்டுவதற்கு முன்னர் காடம்பாறை, அப்பர் ஆழியாறு கட்டப்பட்டுள்ள அணைப் பகுதி, ஆழியாறு அணை கட்டியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நீரை எங்களது முன்னோர் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனர். அணைகள் கட்டும்போது, விவசாயிகளின் உரிமை எப்போதும் போல இருக்கும் என்று தெரிவித்தனர். ஆனால், இந்த ஆண்டு காடம்பாறை, அப்பர் ஆழியாறு அணைகளில் இருந்து தண்ணீர் தராமல் இருப்பது எங்களது பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாக உள்ளது என்றனர்.
காடம்பாறை மின்வாரிய கண்காணிப்புப் பொறியாளர் பழனிசாமி கூறுகையில், "அப்பர் ஆழியாறு அணை பிஏபி திட்டத்தில் உள்ள அணைதான். விவசாயத்துக்குத் தண்ணீர் திறப்பது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

