கோவை மாநகராட்சிப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வகுப்பறை இல்லாததைக் கண்டித்து, அவர்களது பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளியை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் மேற்கு, சம்பந்தம் சாலையில் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 700 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் கணக்குப் பதிவியல் - வணிகவியல் பாடப் பிரிவில் 90 மாணவிகள் உள்ளனர்.
ஆனால், இவர்களில் 45 மாணவிகள் அமர்வதற்கு இந்தப் பள்ளியில் வகுப்பறை இல்லை. அதனால், இவர்கள் பள்ளியின் கூட்ட அரங்கில் அமர வைக்கப்பட்டுள்ளனராம். கூட்டங்கள் நடைபெறும் நாள்களில் இவர்கள் மரத்தடியிலும், பிற பகுதியிலும் அமர்ந்து பாடம் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கூட்ட அரங்கையொட்டிய இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் நாய் ஒன்று இறந்துள்ளது. அந்த துர்நாற்றத்துக்கு இடையே அங்கு அமர்ந்து பாடம் பயின்று வந்த மாணவிகள், அக்டோபர் 30-ஆம் தேதி துர்நாற்றம் அதிகமாக வீசியதால் ஒட்டுமொத்தமாக செவ்வாய்க்கிழமை வகுப்பைப் புறக்கணித்துள்ளனர்.
இதையறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை பள்ளிக்கு நேரில் வரவேண்டும் என்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து, புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் பெற்றோர், தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு, தங்களது குழந்தைகளுக்கு வகுப்பறை ஒதுக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல, மாணவிகளும் பள்ளி ஆசிரியர்களிடம் வகுப்பறைக்காக காரசார விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, மாணவர் சேர்க்கையின்போதே இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துவிட்டதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த பெற்றோர், மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, 4 வகுப்பறைகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், பணிகள் முடிவடைந்த பின்னர் மாணவிகளுக்கு வகுப்பறை ஒதுக்கப்படும் என்றும் தலைமை ஆசிரியர் உறுதி அளித்தார். அதை ஏற்று பெற்றோர், மாணவிகள் கலைந்துசென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.