அரசுப் பள்ளியை மதுக் கூடமாக மாற்றிய சமூக விரோதிகள்

பொள்ளாச்சி அருகே 24 மணி நேரமும் செயல்படும் மதுக் கடையால் அருகில் உள்ள அரசுப் பள்ளி மதுக் கூடமாக மாற்றப்பட்டு விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
Updated on
1 min read

பொள்ளாச்சி அருகே 24 மணி நேரமும் செயல்படும் மதுக் கடையால் அருகில் உள்ள அரசுப் பள்ளி மதுக் கூடமாக மாற்றப்பட்டு விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த குஞ்சிபாளையத்தில் உள்ள மதுக் கடையில் சட்டப்படி விற்பனை நடைபெறும் நேரம் தவிர மற்ற நேரங்களிலும் அவ்வப்போது கடையைத் திறந்து மது பாட்டில்களை எடுத்து மதுக் கூடத்தில் வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சட்டப்படியான விற்பனை நேரத்தில் மட்டும் மதுக் கூடத்தில் மது அருந்த அனுமதியளிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மதுக் கூடத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுவை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றுவிடவேண்டும் என கூறிவிடுவதால், மது அருந்துவோர் அருகில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடத்துக்குச் சென்று மது அருந்துகின்றனராம்.
 மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்களை பள்ளி வளாகத்தில் வீசிச் செல்வதுடன்,  அங்கு அசுத்தம் ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடுகின்றனராம்.  
இதனால், காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் காலி மது பாட்டில்களை அப்புறப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து குஞ்சிபாளையம் பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து பள்ளி முன்பு வியாழக்கிழமை திரண்டனர். தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி வளாகத்தில் மது அருந்தாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து,  மதுக் கடையில் காவல் துறையினர் சோதனை நடத்தச் சென்றுள்ளனர். அப்போது, மதுக்கூடத்தில் மது விற்பனை நடைபெற்றுகொண்டிருந்துள்ளது.
அங்கு மதுவாங்க நின்றிருந்த 50-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரைக் கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர். மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களையும், பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com