காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் நான்காவது நாளாக ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட திமுகவினர் உள்பட 465 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர், மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கோவை மாநகரிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த போராட்டங்கள் நான்காவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்: கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை வகித்தார். கோஷங்களை எழுப்பியவாறு ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்ற இவர்களை காவல் துறையினர் தடுத்தனர். இதனால், வாக்குவாதமும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து, மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ஆறுமுகம், நிர்வாகிகள் ஜேம்ஸ், சண்முகம் உள்ளிட்ட 163 பேரை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை: கோவை, சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தை பாடைகளுடன் சென்று திமுகவினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமை வகித்தார். சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், பகுதிச் செயலாளர் எஸ்.எம்.சாமி, 63 பெண்கள் உள்பட 150 பேரை சிங்காநல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
செல்வபுரத்தில் சாலை மறியல்:கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமை வகித்தார். இதில் போராட்டக்காரர்கள் பிளாஸ்டிக் எலியை வாயில் கடித்தபடியும், பிளாஸ்டிக் எலும்பு மாலையை அணிந்தும் சங்கு ஊதி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உள்பட 43 பேரை செல்வபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
கணபதியில் முற்றுகை: திமுக முன்னாள் கவுன்சிலர் மீனா லோகு தலைமையில் கணபதியில் உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவிநாசி சாலையில் மறியல்: கோவை, அவிநாசி சாலை நவஇந்தியா அருகே திமுக பகுதிச் செயலர் பி.டி.முருகேசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தேசம் அமைப்பைச் சேர்ந்த 20 பேரை ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் கைது செய்தனர்.கோவை மாநகரில் 4-ஆவது நாளாக நடைபெற்ற மறியல் போராட்டம் தொடர்பாக 101 பெண்கள் உள்பட 465 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தமாகா கையெழுத்து இயக்கம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சிங்காநல்லூர் பகுதியில் மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மாவட்டப் பொறுப்பாளர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கார்த்திக் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி நிர்வாகி சேனாதிபதி தலைமையில் நெசவாளர்கள் மத்வராயபுரத்தில் புதன்கிழமை மாட்டு வண்டிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க கோரி பொதுமக்கள், வணிகர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


