ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டாப்சிலிப்பில் மருத்துவர்கள் இல்லாமல் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாம்

டாப்சிலிப்பில் வனத் துறை வளர்ப்பு யானைகளுக்காக நடத்தப்படும் புத்துணர்வு முகாம் மருத்துவர்கள் இல்லாமலேயே நடைபெறுகிறது.

Updated On :10 பிப்ரவரி 2018, 9:17 pm


டாப்சிலிப்பில் வனத் துறை வளர்ப்பு யானைகளுக்காக நடத்தப்படும் புத்துணர்வு முகாம் மருத்துவர்கள் இல்லாமலேயே நடைபெறுகிறது.
இதனால் முகாமின் நோக்கமே வீணாவதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், முதுமலை-தெப்பக்காடு, கோவை மாவட்டம், ஆனைமலை-டாப்சிலிப், கோவை ஆகிய இடங்களில் யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாம் யானைகளுக்குப் பாகன்கள் பயிற்சியளித்து, கும்கி ஆபரேஷனுக்கும், யானைச் சவாரிக்கும், வனப் பகுதி மேம்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், குறிப்பாக டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள கும்கி யானைகள் சிறந்த பயிற்சி பெற்று, வனப் பகுதியை விட்டு வெளியே வரும் எவ்வளவு பெரிய காட்டு யானைகளாக இருந்தாலும், அதை அடக்கவும், மீண்டும் வனப் பகுதிக்கு விரட்டவும், யானைகளைப் பிடிக்கவும் வனத் துறைக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன.
குறிப்பாக கலீம் என்ற கும்கி யானை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கு செல்வதுடன், கேரளத்துக்கும் சென்று காட்டு யானையைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி, டாப்சிலிப் வளர்ப்பு முகாமில் உள்ள கும்கி யானைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு கோவை மண்டலத் தலைமைக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆலோசனையின்படி மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவ்வப்போது முகாமுக்கு வந்த கால்நடை மருத்துவர் மனோகரன் யானைகளின் ஆரோக்கியம், உடல் நலம் குறித்து பரிசோதித்தும் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டாப்சிலிப் யானைகளுக்குப் புத்துணர்வு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாமில் யானைகளுக்கு சத்துணவுகள், வைட்டமின் மாத்திரைகள், லேகியம் போன்றவை வழங்கப்படுகின்றன. தொடர்ந்து 48 நாள்களுக்கு யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, யானைகள் பராமரிக்கப்படவேண்டும். குறிப்பாக தினமும் மருத்துவப் பரிசோதனை செய்து, யானைகளின் உ டல் எடைக்குத் தகுந்தாற்போல, சத்துணவு, வைட்டமின் மாத்திரைகள், லேகியம் போன்றவை வழங்குவதற்கு கால்நடை மருத்துவர் இல்லை. இதனால், டாப்சிலிப் யானைகளுக்கு முகாமில் தினசரி மருத்துவப் பரிசோதனை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகப் புத்துணர்வு முகாம் நடைபெறும்போதும், டாப்சிலிப் யானைகளுக்கு தினசரி மருத்துவப் பரிசோதனை கிடைத்தது இல்லை. முகாமின் ஏதாவது ஒரு நாளில் கால்நடை மருத்துவர் வந்து பார்த்துச் செல்வார்.
புத்துணர்வு முகாம் நாள்கள் தவிர மற்ற நாள்களிலும், யானைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலோ, வேறு ஏதாவது பிரச்னை என்றாலோ உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. டாப்சிலிப், ஆழியாறு தாற்காலிக யானைகள் முகாம் என மொத்தம் 23 யானைகள் இருந்தும் கால்நடை மருத்துவர் இல்லாதது யானைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
டாப்சிலிப் யானைகள் கும்கி ஆபரேஷன், சவாரி என பல வழிகளில் உதவி செய்தும், ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் புத்துணர்வு முகாமில் மருத்துவர்களைக் கொண்டு ஊட்டச்சத்து உணவுகள், வைட்டமின் மாத்திரைகள் தேவையான அளவு, மருத்துவப் பரிசோதனை வழங்கினால்தான் யானைகளுக்கு உண்மையான புத்துணர்வு கிடைக்கும்.
ஆனால், மருத்துவர்கள் இல்லாமல் புத்துணர்வு முகாம் நடத்தினால், அரசின் நிதி மற்றும் நோக்கம் வீணாகவே செய்யும்.
இதுகுறித்து, வனத் துறையினர் கூறுகையில், 'யானைகள் புத்துணர்வு முகாமில் சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, தலைமை வனப் பாதுகாவலர் வனத் துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர். ஆனால், வனக் கால்நடை மருத்துவர் வரவில்லை. கடந்தவாரம் தான் வந்துசென்றார்' என்றனர்.
தன்னார்வலர் சுரேஷ் கூறியதாவது:
வளர்ப்பு யானைகளுக்கு 48 நாள்கள் முகாம் நடத்துவதே புத்துணர்வு ஏற்படுத்தத்தான். ஆனால், டாப்சிலிப் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. காரணம், புத்துணர்வு முகாமில் மருத்துவர்கள் யானைகளைப் பரிசோதிப்பதில்லை. கோயில் யானைகள் புத்துணர்வு முகாம், தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாம் போன்றவற்றில் கடந்த காலங்களில் கால்நடை மருத்துவர் தினசரி யானைகளைக் கண்காணிப்பார்கள். ஆனால், டாப்சிலிப்பில் முகாமின் நோக்கமே வீணாகும் வகையில், மருத்துவர் இல்லாமல் முகாம் நடைபெறுவது வருத்தமளிக்கிறது.
தமிழக அரசு ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப்புக்குத் தனியாக மருத்துவரை நியமிக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.