அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் மீண்டும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் டாக்டர் ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 பிரிவுகளில் 789 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களும், 15 பிரிவுகளில் 396 மருத்துவ பட்டய மேற்படிப்புகளும், 8 பிரிவுகளில் 40 பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1,205 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவீத இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன.
ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கிய விதிகளைக் காரணம் காட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் மேற்கண்ட இடங்கள் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டச் செயலர் ரவிசங்கர் கோவையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம் தடுப்பு, கர்ப்பிணிகள் பாதுகாப்பு போன்றவை அரசு மருத்துவர்களால்தான் மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புக்கு தேர்வு எழுதியிருக்கும் நிலையில், மாநில அரசு இது தொடர்பாக மத்திய அரசிடம் உடனடியாக வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் 50 சதவீத இட ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அரசு மருத்துவர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.