ஆசிரியர்களுக்கு நடத்தப்படுவதைப் போலவே பள்ளிக் கல்வித் துறை அலுவலகப் பணியாளர்களுக்கும் இணையவழி பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித் துறையில் அலுவலகப் பணியாளர்களும் ஒரு அங்கம். அரசால் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் கடைக்கோடி பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் செய்து வருகிறோம். இதன் மூலம் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு துணையாக இருக்கிறோம்.
பள்ளிக் கல்வித் துறைப் பணியாளர்களுக்கு ஒளிவு மறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை இணைய வழியில் நடத்தியதைப் போன்று எங்களுக்கும் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
அண்மையில் கோவைக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் த.ல.சீனிவாசன், மாநில உயர்நிலைக் குழுத் தலைவர் எம்.வி.பால்ராஜ் ஆகியோரின் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.மனோகர், கோவை மாவட்ட பொருளாளர் என்.ஜனார்த்தனன், துணைத் தலைவர் க.யோகசந்தர், கல்வி மாவட்டத் தலைவர் வி.எஸ்.சபாபதி, துணைத் தலைவர் எஸ்.ராஜன், இணைச் செயலர் செ.சு.சரவணகுமார் ஆகியோர் இந்த கோரிக்கை குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






