கோவையில் ரூ. ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 14 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கோவையில் உள்ள பிரபல நகைக் கடையில் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சி.ஆர்.அர்ஜூன், டி.எஸ்.வில்பிரட் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவரும் கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள தங்களது நிறுவனத்தின் கிளையில் இருந்து கோவை கிளைக்குத் தேவையான ரூ. 98.50 லட்சம் மதிப்பிலான 3.1கிலோ நகைகள், 251 கிராம் வைரக் கற்கள், 243 கிராம் வெள்ளிப் பொருள்களை நிறுவனத்துக்குச் சொந்தமான காரில் ஜனவரி 7ஆம் தேதி எடுத்து வந்தனர்.
கோவை மாவட்டம், நவக்கரை அருகே வந்தபோது, இரு கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இவர்களது காரை வழிமறித்து, ஊழியர்களைத் தாக்கி, காரில் இருந்த நகைகளுடன் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக கோவை க.க.சாவடி போலீஸாரும் கேரள மாநில போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கென டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கார்த்திகேயன், பாலமுருகன், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே கோவை, மதுக்கரை- தென்றல் நகர் அருகே நகைக் கடைக்குச் சொந்தமான காரையும், மதுக்கரை- வழுக்குப்பாறை பகுதியில் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரையும் அடுத்தடுத்த நாள்களில் போலீஸார் மீட்டனர்.
கொள்ளையில் தொடர்புடையவர்கள் கேரளம், வேலூர், ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததால், தனிப் படையினர் அந்த ஊர்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை- ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜனவரி 10ஆம் தேதி சரணடைந்தனர். அவர்களை கோவை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும், தனிப்படையினர் நடத்திய விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த ரசூல் என்பவரின் இளைய மகன் பைரோஸ் (27) தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நகைக் கடைக்குச் சொந்தமான நகைகளைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது. பின்னர் திருவள்ளூர் தப்பிச் சென்ற பைரோஸ், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பாதியைத் தனது தாய் ஷமா மற்றும் மூத்த சகோதரர் முகமது சலீமிடம் (29) அளித்துவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.
நகைகளுடன் திருப்பதிக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஷமா, சகோதரர் முகமது சலீமை 17 ஆம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் வைத்து திருப்பதி போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,965 கிராம் நகைகள், 15 கிராம் எடையுள்ள வைரக் கற்கள், 243 கிராம் வெள்ளி நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பைரோஸ் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீஸார் அவரையும், கேரளத்தைச் சேர்ந்த கண்ணன் (38), ஹபீப் (41), ரின்ஷாத் சித்திக் (24), விபின் சங்கித் (28), ரெனூப் (34), வேலூரைச் சேர்ந்த பைரோஸ் (23), அத்திக் பாஷா (21), ராஜசேகரன் (33), ரிஸ்வான் ஷெரிப் (21), பெங்களூரைச் சேர்ந்த மெகபூபாஷா (26), சாதிக் உசேன் (25), சையது நயீம் (24), அப்துல் ரஹிம் (25) உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து 2,488 கிராம் தங்க நகைகள், 251 கிராம் வைர நகைகள், 243 கிராம் வெள்ளி நகைகளை மீட்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட இரு கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கேரள மாநிலத்தில் இருந்து கோவையில் உள்ள நகைக் கடைக்கு நகைகள் எடுத்து வருவது குறித்து நகைக் கடையின் முன்னாள் ஊழியர் ஒருவர் மூலம் பைரோஸ் தெரிந்துகொண்டார். மேலும், இது கணக்கில் காட்டப்படாத தங்கம் எனவும் அவருக்குத் தவறான தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியுள்ளார்.
பைரோஸ், அவரது சகோதரர் சலீம் ஆகியோர் மீது ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கட்டை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் ஹவாலா பண மாற்றம், நகை கொள்ளை சம்பவங்களை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருடிய நகைகளை தனது கூட்டாளிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என பல பகுதிகளுக்கு பைரோஸ் அனுப்பி வைத்துள்ளார். தனிப்படையினர் நடத்திய விசாரணையின் மூலம் ஒவ்வொருவராகப் பிடிபட்டனர். மேலும் இந்தக் கொள்ளை வழக்கில் இதுவரை மொத்தம் 18 பேர் பிடிபட்டுள்ளனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்எல்ஏ- வாக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி! | EPS |
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம்! அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!

முதல்வர் விஜய் எம்எல்ஏ-வாக பதவியேற்றுக் கொண்டார்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
