திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் அக்கட்சியின் சூலூர் தொகுதி வேட்பாளர் எம்.வி.விஜயராகவனை ஆதரித்து அவர் பேசியதாவது: ஆண்ட, ஆளும் கட்சியினரான திமுக, அதிமுகவினர் மதுக்கடைகளை திறந்து மதுவை ஆறாக பாயவிட்டுள்ளனர். தற்போது தமிழகத்தில் மது குடிக்கும் ஒரு சமுதாயத்தை படைத்தது தான் அவர்களின் சாதனையாக உள்ளது.
இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளின் எண்ணம்போல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்டியையே நினைத்தவருக்கு பெட்டி சின்னம். நாங்கள் விவசாயியையே நினைத்ததால் விவசாயி சின்னம் கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி திகழும். தண்ணீர் இல்லாமல் உலகம் அவதியுறுகிறது. தண்ணீரை சேமிக்க யோசிக்காமல் விற்பனைக்கு யோசிக்கிறார்கள். பணக்கார நாடு என்பதற்கு அடையாளமாக தங்கம் இருப்பு அதிக அளவில் இருப்பது போய், தண்ணீர் எவ்வளவு உள்ளது என கணக்கிடும் சூழல் தற்போது உள்ளது.
தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. தேர்தலில் நிற்கும் மற்ற கட்சிகளுக்கு அதற்கான எந்த திட்டமும் இல்லை. தூய அரசியலை நடத்தும் கட்சியாக நாங்கள் உருவெடுத்து வருகிறோம். பசுமை சூழல் பள்ளிகளை உருவாக்குவோம். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி வழங்குவோம். வளமான தமிழகமே நாம் தமிழர் கட்சியின் நோக்கம் என்றார்.
இக்கூட்டத்தில் அக் கட்சியின் கோவை மக்களவை வேட்பாளர் கல்யாணசுந்தரம், சூலூர் இடைத்தேர்தல் வேட்பாளர் விஜயராகவன், திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.