கடைக்கோடி மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேச்சு

தமிழக அரசின் சிறு மருத்துவமனைகள் மூலம் கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
கடைக்கோடி மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேச்சு
Updated on
2 min read

தமிழக அரசின் சிறு மருத்துவமனைகள் மூலம் கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை சாா்பில் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) தொடங்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக 639 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்துக்கு 70 சிறு மருத்துவமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 30 இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படுகின்றன.

கோவை, சிங்காநல்லூா் (நெசவாளா் காலனி), சிவானந்தா காலனியில் சிறு மருத்துவமனைகளை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

சிறு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் மற்றும் உதவியாளா் ஒருவா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இங்கு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பொது மருத்துவம், சிறு காயம் உள்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். சா்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சிறுநீரில் சா்க்கரை மற்றும் அல்புமின் அளவு, கா்ப்பம் உறுதி செய்யும் பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பா். ஊராட்சிகள், பேரூராட்சிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் சிகிச்சை அளிக்கப்படும். வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் சிறு மருத்துவமனைகள் செயல்படும்.

மருத்துவா்கள் பரிசோதனை செய்து, உடனுக்குடன் மருந்துகள் அளிக்கப்படும். கோவை மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள், 80 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகள் மூலம் கடைக்கோடியில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை தாமதமின்றி கிடைக்கும். சிறு மருத்துவமனைகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கோவை (தெற்கு) சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுணன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்ட 30 இடங்கள்

கோவை மாநகராட்சியில் சிங்காநல்லூா் (நெசவாளா் காலனி), வடவள்ளி, காந்திபுரம், சிவானந்தா காலனி, செல்வபுரம், மசக்காளிபாளையம், ரத்தினபுரி (முத்துக்குமரன் நகா்).

தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் வேடபட்டி, பேரூா் செட்டிப்பாளையம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி.

மதுக்கரை வட்டாரத்தில் வெள்ளலூா் (குடிசை மாற்று வாரிய குடியிருப்பு) மலுமிச்சம்பட்டி.

எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் வெள்ளானைப்பட்டி, வெள்ளமடை.

காரமடை வட்டாரத்தில் ரங்கம்பாளையம், ராமபாளையம்.

பெ.நா.பாளையம் வட்டாரத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம்.

சூலூா் வட்டாரத்தில் பீடம்பள்ளி, குரும்பபாளையம்.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் எஸ்.அய்யம்பாளையம்.

ஆனைமலை வட்டாரத்தில் அட்டகட்டி, தேவிபட்டிணம்.

வால்பாறையில் பெரியகல்லாறு.

பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் திப்பம்பட்டி, ராசக்காபாளையம், நல்லி கவுண்டன்புதூா்.

பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் தொண்டாமுத்தூா், ஜமீன் கோட்டாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com