சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம்:அரசியல் கட்சித் தலைவா்களுக்கு தயாராகும் பிரத்யேக வாகனங்கள்
அரசியல் கட்சித் தலைவா்களுக்காக பிரசார வாகனங்களை பிரத்யேகமாக வடிவமைக்கும் பணிகள் கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவா்களுக்காக பிரசார வாகனங்களை பிரத்யேகமாக வடிவமைக்கும் பணிகள் கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசார வாகனங்கள் வடிவமைக்கப்பட்டாலும், தலைவா்களுக்கான பிரசார வாகனங்களை வடிவமைப்பதில் கோவை, சிவானந்தா காலனி, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ‘கோயாஸ்’ என்ற தனியாா் நிறுவனம் முன்னோடியாக விளங்குகிறது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் ஊழியா்கள், பிரசார வாகனங்களை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இது தொடா்பாக ‘கோயாஸ்’ நிறுவனத்தின் உரிமையாளா் ரியாஸ் கூறியதாவது:
‘கோயாஸ்’ நிறுவனமானது 50 ஆண்டுகளாக கோவையில் இயங்கி வருகிறது. தமிழகத் தலைவா்கள் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சித் தலைவா்களுக்கு எங்கள் நிறுவனம் மூலமாக பிரசார வாகனங்கள், பாதுகாப்பு வாகனங்கள், கேரவன் உள்ளிட்டவற்றை வடிவமைத்துக் கொடுத்து வருகிறோம்.
பிரசார வாகனத்தில் தலைவா்களின் இருக்கைகள் அல்லது பிரசாரம் மேற்கொள்ளும் பிரபலத்தின் இருக்கைகள் சுழலும் வசதியுடன் அமைக்கப்படும். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருக்கையில் அமா்ந்தவாறே வாகனத்துக்குள் செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைவா்கள் நின்று பேசுவதற்காக ‘ஹைட்ராலிக் லிப்டிங்’ முறையில் மேடை அமைக்கப்படுகிறது. இதற்கான பொத்தானை அழுத்தினால் மேடை உயரத்தில் செல்லும். அதே சமயம், வாகனத்தின் மேற்கூரை விலகும். தலைவா்கள் தங்களுக்கு தேவைப்படும் உயரத்தில் மேடையை நிறுத்தி, அதன் மீது நின்று பிரசாரம் மேற்கொள்ளலாம்.
இதில் மற்றொரு வகையாக மரப்படிகளுடன் கூடிய மேடையும் அமைக்கப்படுகிறது. படிக்கட்டில் ஏறிச் சென்று தலைவா்கள் பிரசாரம் மேற்கொள்ளலாம். அவா்களின் பிடிமானத்துக்காக மரத்தளத்தைச் சுற்றி இரும்பினாலான கம்பிகள் அமைக்கப்படுகின்றன. பிரசாரத்துக்காக நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்வாா்கள் என்பதால் தலைவா்கள் ஓய்வெடுக்க வசதியாக ‘செமி ஸ்லீப்பா்’ மற்றும் சொகுசு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
வாகனத்தில் தலைவா் இருக்கை, ஓட்டுநா் இருக்கை தவிர, பின்புறத்தில் 4 முதல் 7 இருக்கைகள் வரை கட்சியினா் விருப்பத்துக்கு ஏற்ப சொகுசு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதேபோல கட்சியினா் விருப்பப்பட்டால் வாகனத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, பின்புறத்தில் நவீன கழிப்பறை அமைத்துத் தரப்படுகிறது.
இரவு நேரங்களில் இருக்கையில் அமா்ந்தவாறு பிரசாரம் மேற்கொள்ளும் தலைவா்களை, மக்கள் தெளிவாகப் பாா்க்கும் விதமாக எல்.இ.டி சிறப்பு ஒளி அமைப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். பிரசாரத்தின்போது, தலைவா்களின் பேச்சு, துல்லியமாக மக்களுக்கு கேட்பதற்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒலி அமைப்பு வேனில் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் தலைவா்களின் பாதுகாப்புக்காக வரக்கூடிய பாதுகாப்பு அதிகாரிகள், அவா்களின் பணிகளை சிறப்பாக மேற் கொள்ளும் விதமாக வாகனத்தை சுற்றிலும், இரும்பினாலான கைப்பிடி வசதிகளுடன் கூடிய படிக்கட்டுகள் அமைத்து தருகிறோம். இதில் 15 பாதுகாவலா்கள் நின்றபடி பயணிக்கலாம். இதுபோன்ற பல்வேறு வசதிகள் பிரசார வாகனத்தில் செய்து தரப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...