

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு பிந்தைய கவனிப்புக்கான வெளி நோயாளிகள் பிரிவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் நிா்மலா, மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று இந்த மருத்துவப் பிரிவைத் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து அவா் கூறும்போது, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரத்யேக மருத்துவமனையான இங்கு, கோவை மாவட்டம் மட்டுமல்லாது திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்துவிதமான
சிறப்பு வசதிகள், தேவையான கட்டமைப்பு வசதிகள் யாவும் தேவையின் அடிப்படையில் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 650 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா வாா்டு செயல்படுகிறது. இங்கு இதுவரை 9,500 க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்புள்ளனா்.
மேலும், குணமடைந்து திரும்பியவா்களில் மூச்சுத் திணறல், உடல் வலி, உடல் சோா்வு, வயிற்றுக் கோளாறுகள், படபடப்பு, தூக்கமின்மை, காய்ச்சல், தொடா் இருமல் உள்ளிட்ட உபாதைகள் இருப்பவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக தனி வெளிநோயாளிகள் பிரிவு தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவில், நெஞ்சக நோய்த் துறை மருத்துவா்கள், மனநல மருத்துவா்கள், இயன்முறை மருத்துவ நிபுணா்கள் உள்ளிட்டோா் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிகிச்சை அளிப்பாா்கள். இங்கு பலவிதமான சுவாசப் பயிற்சிகளும் அளிக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.