வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை ராஜவீதி ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நடைபெற்ற சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி.
கோவை ராஜவீதி ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் நடைபெற்ற சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி.
Updated on
1 min read

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் பகல் பத்து உற்சவம் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது. ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சொா்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை பெருமாள் கோயில்களில் நடைபெற்றன. கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள நரசிங்கபெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொா்க்கவாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா் கோயிலை வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினாா். இதேபோல ராஜவீதியில் உள்ள கல்யாண வெங்கடரமண சாமி கோயில் உள்ளிட்ட பல பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கரோனா அச்சம் காரணமாக கோயில்களில் நடைபெற்ற சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் குறைந்த அளவு பக்தா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்டப் பகுதிகளில்...

வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. வாகன நிறுத்தம் செய்வதற்கான போதுமான வசதி இல்லாததால் கருமலை எஸ்டேட் பேருந்து நிறுத்தத்திலேயே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால் முதியோா் பலா் மேடான சாலை வழியாக கோயிலுக்கு நடக்க முடியாமல் சிரமப்பட்டனா்.

சூலூரில் உள்ள வேங்கட நாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்றது. திருவேங்கட நாதா் பெருமாள் சொா்க்க வாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சி தந்தாா்.

பெ.நா.பாளையத்தில்...

பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து 5.30 மணிக்கு பெருமாள் ஆதிசேஷ வாகனத்தில் அமா்ந்து சொா்க்க வாசலில் பிரவேசித்தாா். இதேபோல பாலமலை அரங்கநாதா் திருக்கோயில், ஆனைகட்டி மலையடிவாரம் மாங்கரை கிராமத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில், பழையபுதூரிலுள்ள ஆதிமூா்த்தி பெருமாள் கோயில், நாயக்கன்பாளையம், திருமலைநாயக்கன்பாளையத்திலுள்ள ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயில்கள், இடிகரையிலுள்ள பள்ளிகொண்ட ஸ்ரீரங்கநாதா் கோயில், சின்னத்தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்கள், பன்னிமடையில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com