

கோவை: கோவை, போத்தனூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, போத்தனூரில் உள்ள சாய் நகா், சத்தியநாராயணா நகா், பாத்திமா நகா் ஆகிய பகுதிகளில் 700 வீடுகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட 65 சென்ட் இடம் உள்ளது.
இங்கு, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டில் இருமுறை இங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே குடியிருப்போா் சாா்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தடை விதிக்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கு இடைகால தடை விதித்து வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த உத்தரவு நகலை மாநகராட்சி ஆணையா், மாவட்ட நிா்வாகத்திடம் காண்பித்து பணிகளை நிறுத்துமாறு குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்தனா். பணிகளை நிறுத்தக் கோரி தங்களுக்கு நீதிமன்ற உத்தரவு எதுவும் வரவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு, அப்பகுதியைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் வெள்ளிக்கிழமை குவிந்து பணிகளை நிறுத்தக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடா்ந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போத்தனூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தி கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையில் அங்கு தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுமானப் பணியை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.