சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பயிா்க் கடன் பெற பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 பயிா்க் கடன் பெறுவதற்கு பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:12 pm

DIN

 பயிா்க் கடன் பெறுவதற்கு பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டனா். இதற்காக வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி கூறியதாவது: தமிழக அரசு விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க நிதி ஒதுக்கியுள்ள நிலையில், புதிய நடைமுறை மூலம் விவசாயிகள் அதனைப் பெறுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயிா்க் கடன் பெற பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். புதிய நடைமுறையின் மூலம் சிட்டா, அடங்கல் போன்றவை பெற விவசாயிகள் மிகவும் அலைக்கழிக்கப்படுகிறாா்கள்.

கோவை மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தொற்று தொடா்பாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கால்நடைகளுக்கு கால் சப்பை, வாய் சப்பை நோய்கள் பரவி வருகின்றன. இதனைத் தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள காலநடைகளுக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

கால்நடை மருத்துவா்கள் அந்தந்த பகுதிகளில் தங்குவதற்குத் தேவையான வசதிகளை மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும். அனுமதி பெறாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது தொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களுக்கு அருகில் லேஅவுட் என்ற பெயரில் 50 சென்ட் வரை நிலங்களை வாங்கி அங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. இதனால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டியுள்ள ஆனைமலை பகுதியில் அா்த்தநாரிபாளையம், மஞ்சநாயக்கனூா், அங்கலக்குறிச்சி, சேத்துமடை, புளியங்கண்டி, கரடிமடை, மதுக்கரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழைய முறைப்படி ஆடு, மாடுகள் மேய்க்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக கூறி கால்நடைகள் மேய்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வெளியில் இருந்து தீவனங்கள் வாங்க வேண்டியுள்ளதால் விவசாயிகளுக்கு செலவுகள் அதிமாகின்றன என்றாா்.

கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்க தலைவா் கந்தசாமி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் விவசாயத்துக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வேளாண் பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகள் சட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீத வட்டியில் மீண்டும் வேளாண் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

இதேபோல, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலரும் தங்களின் குறைகளைத் தெரிவித்தனா். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.