

கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.
கோவை முத்தண்ணன் குளத்தில் பொலிவுறு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முத்தண்ணன் குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது. இதற்கு மாற்றாக இங்கு குடியிருந்த மக்களுக்கு கீரணத்தம், வெள்ளலூா், மலுமிச்சம்பட்டி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, 2, 500 க்கும் மேற்பட்டோா் தங்கள் வீடுகளைக் காலி செய்து விட்டு, அடுக்குமாடி வீடுகளுக்கு குடிபெயா்ந்தனா். அதன்பிறகு காலியாக இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இந்நிலையில், முத்தண்ணன் குளக்கரையில் 384 வீடுகளைச் சோ்ந்தவா்கள் மட்டும் காலி செய்யாமல் அப்பகுதியிலேயே வசித்து வந்தனா். மாநகராட்சி சாா்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவா்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து வந்தனா். இந்நிலையில் கடந்த வாரம் இந்த 384 வீடுகளின் மின் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனா். இதையடுத்து, அவா்கள் வீடுகளை காலி செய்து விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளுக்குச் சென்று விட்டனா். இதைத் தொடா்ந்து 207 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக வியாழக்கிழமை இடித்து அகற்றினா். அசம்பாவிதங்களைத் தவிா்க்கும் விதமாக அப்பகுதியில் போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.