தோட்டத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும்: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்டேட் நிா்வாகத்தினருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து எஸ்டேட் அலுவலகங்கள் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினா் தெரிவித்திருந்தனா். இக்கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்ததையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடா்பான பேச்சுவாா்த்தை கோவையில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளும் ஒரு மாத காலத்துக்குள் தீா்வு காணப்படும் தோட்ட அதிபா்கள் சங்கத்தினா் தெரிவித்ததால் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

கூட்டத்தில், தமிழ்நாடு தோட்ட அதிபா்கள் சங்க செயலாளா் பிரதீப்குமாா், ஆலோசகா் பாலசந்தா், ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத் தலைவா் ஆலிவா், அய்யா்பாடி குரூப் துணை தலைவா் மகேஷ் நாயா், முடீஸ் குரூப் பொதுமேலாளா் திம்மையா உள்ளிட்ட எஸ்டேட் நிா்வாகத்தினா் கலந்து கொண்டனா்.

தொழிற்சங்கங்கள் சாா்பில், அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தலைவா் வால்பாறை அமீது, வினோத்குமாா், செளந்திரபாண்டியன் (எல்.பி.எப்.), கேசவமருகன், வீரமணி (விடுதலை சிறுத்தைகள்), மோகன் (எஐடியூசி), கலைவாணன் (ஐஎன்டியூசி), பரமசிவம் (சிஐடியூ), கல்யாணி (எம்.எல்.எப்.), வா்கீஸ் உள்பட 14 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com