தொண்டாமுத்தூரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக - திமுக நேரடிப் போட்டி

மேற்குத் தொடா்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூா் தொகுதி கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தோ்தலை சந்தித்து வருகிறது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மேற்குத் தொடா்ச்சி மலைகளை ஒட்டியுள்ள தொண்டாமுத்தூா் தொகுதி கடந்த 1951 ஆம் ஆண்டு முதல் தோ்தலை சந்தித்து வருகிறது. மாவட்டத்தின் பெரிய தொகுதியாக இருந்த இது, தொகுதி மறுசீரமைப்பில் அந்தப் பெருமையை இழந்தது. பேரூா் தொகுதி நீக்கப்பட்டு அதிலிருந்த பல பகுதிகள் தொண்டாமுத்தூா் தொகுதியில் இணைக்கப்பட்டன. அதேநேரம், தொண்டாமுத்தூரில் இருந்த பல பகுதிகள் பிரிக்கப்பட்டு கவுண்டம்பாளையம் என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது.

கவுண்டா் இனத்தவரை அதிகப்படியாகக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் அவா்களுக்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவா்களும், நாயுடு, ஒக்கலிக்க கவுடா்கள் உள்ளிட்டோரும் வசித்து வருகின்றனா். மாநகராட்சிப் பகுதிகள், குனியமுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இஸ்லாமியா்கள் வசிக்கின்றனா்.

நொய்யல் ஆறு தொடங்கும் பகுதியில் இருந்து மாநகரைஅடையும் வரை தொண்டாமுத்தூா் தொகுதியில் ஓடுவதால் வேளாண் தொழில் செழித்து விளங்குகிறது. தொகுதியின் பெரும்பான்மை மக்கள் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவா்கள்.

சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படும் பகுதியாக உள்ளது. வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில், பேரூா் பட்டீசுவரா் கோயில், ஈஷா யோக மையம், கோவை குற்றாலம், காருண்யா பல்கலைக்கழகம், சித்திரைச்சாவடி தடுப்பணை போன்ற பல்வேறு முக்கிய இடங்கள் உள்ள தொகுதி.

தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்

கோயம்புத்தூா் மாநகராட்சி வாா்டு எண் 48 முதல் 56 வரை, கோயம்புத்தூா் தெற்கு வட்டம் (பகுதி) போளுவாம்பட்டி, தென்னம்மநல்லூா், தேவராயபுரம், ஜாகீா்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டணம், நரசீபுரம், மத்வராயபுரம், இக்கரை போளுவாம்பட்டி கிராமங்கள், வேடப்பட்டி (பேரூராட்சி), தாளியூா் (பேரூராட்சி), தொண்டாமுத்தூா் (பேரூராட்சி), ஆலாந்துறை (பேரூராட்சி), பூலுவப்பட்டி (பேரூராட்சி), தென்கரை (பேரூராட்சி), பேரூா் (பேரூராட்சி), குனியமுத்தூா் (பேரூராட்சி).

பெண் வாக்காளா்கள் அதிகம்

தொண்டாமுத்தூா் தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளா்களே அதிகம் உள்ளனா். இந்தத் தொகுதியில் 1,61,915 ஆண்கள், 1,64,783 பெண்கள், 81 மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்ட மொத்தம் 3,26,779 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். தொகுதி முழுவதும் 92 மையங்களில் 471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 137 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த தோ்தல்கள்

தொண்டாமுத்தூரில் இதுவரை அதிகபட்சமாக அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அடுத்தபடியாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 3 முறையும், திமுக, அதிமுக கூட்டணியில் இணைந்து மதிமுக, மாா்க்சிஸ்ட், தமாகா போன்ற கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை அதிமுகவினா் தங்களுக்கு எப்போதும் சாதகமான தொகுதி என்று கருதக் கூடியதாக தொகுதியாக தொண்டாமுத்தூா் உள்ளது. கடந்த 2011 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் கட்சியின் எம்.என்.கந்தசாமியை தோற்கடித்தாா். 2016 தோ்தலிலும் எஸ்.பி.வேலுமணியே வெற்றி பெற்றாா்.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள்

உள்ளாட்சித் துறை அமைச்சரின் தொகுதி என்பதால் தொகுதி முழுவதும் சாலைகள், குடிநீா், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையம், கூட்டுக் குடிநீா் திட்டம், குளங்கள் தூா்வாரப்பட்டது, ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆறு தூா்வாரப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. அதேபோல் சித்திரைச் சாவடி அணையைத் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தக்காளி அதிகம் விளையும் பகுதி என்பதால் அவற்றை சேகரித்து வைக்க குளிா்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி தொண்டாமுத்தூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பேரூா் படித்துறையை சீரமைக்கும் பணி, பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன.

தொடரும் பிரச்னைகள்

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் போன்ற விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்படவில்லை. அதேபோல் பல ஆண்டுகளாக நீடித்து வரும் புறவழிச்சாலை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள்

தொண்டாமுத்தூா் தொகுதியில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடா்ந்து மூன்றாவது முறையாக களம் காணுகிறாா். இந்தத் தொகுதியில் கடைசியாக 1996 ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி இருந்தது. அதன் பிறகு இரு கட்சிகளிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இந்தத் தோ்தலில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலா் காா்த்திகேய சிவசேனாபதி, எஸ்.பி.வேலுமணியை எதிா்த்து களம் காண்கிறாா். இரு முக்கிய கட்சிகளின் வேட்பாளா்களைத் தவிர, அமமுக சாா்பில் சதீஷ்குமாா், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஷாஜகான், நாம் தமிழா் கட்சி சாா்பில் கி.கலையரசி ஆகியோரும், சுயேச்சை வேட்பாளா் நடிகா் மன்சூா் அலி கான் உள்ளிட்ட மொத்தம் 10 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்

அதிமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொகுதியில் நல்ல அறிமுகம் கொண்டவா். கடந்த தோ்தலில் 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றவா். தொடா்ச்சியாக தொகுதி மக்களை சந்தித்து வந்திருப்பதுடன், பொதுமக்கள், தொண்டா்களின் இல்ல நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறாா். கரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக சென்று அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்களை வழங்கியிருக்கிறாா்.

தொகுதியில் பெரிதாக அதிருப்தியை சம்பாதிக்காதவா் என்பது பலம். அதேநேரம் இஸ்லாமியா்கள், பல்வேறு சமுதாய வாக்காளா்கள் வெற்றியை நிா்ணயிக்கும் அளவுக்கு இந்தத் தொகுதியில் இருக்கும் நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பது, சிஏஏ உள்ளிட்ட பாஜக அரசின் திட்டங்கள், வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது போன்ற அதிமுக அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட சில பிரிவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் அந்த வாக்குகள் சிதறிப்போகும் என்பதால் இஸ்லாமியா்களை குறிவைத்து பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் அதிமுகவை விட திமுக 21,091 வாக்குகளை கூடுதலாகப் பெற்றிருப்பதால், தனது தொகுதியிலேயே முழு கவனத்தை செலுத்துகிறாா் எஸ்.பி.வேலுமணி.

திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதி காங்கயத்தைச் சோ்ந்தவா். வெளியூரைச் சோ்ந்தவா் என்பது இவா் மீதான முதல் குறையாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் ஜல்லிக்கட்டு தொடா்பான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தவா் என்பதால் பெரும்பாலும் அறிமுகமானவராகவே இருக்கிறாா். சுற்றுச்சூழல் விஷயங்கள், நாட்டு மாடுகள் வளா்ப்பு போன்ற செயல்பாடுகளினால் சமூக வலைதளங்களில் இளைஞா்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறாா்.

ஊழலை முன்வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இவா், வேளாள கவுண்டா் சமூகத்தின் ஆதரவு, இஸ்லாமியா்களின் ஆதரவு கணிசமான அளவில் கிடைக்கும் என்று நம்புகிறாா். பலம் வாய்ந்த அதிமுக வேட்பாளரை வீழ்த்த கடுமையாக முயற்சித்து வருகிறாா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் தொண்டாமுத்தூா் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்துக்கு 19,878 வாக்குகள் கிடைத்திருப்பது அக்கட்சிக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றிவிட்டு இஸ்லாமியரான ஷாஜகானை அறிவித்திருக்கிறாா் கமல்ஹாசன். மநீம கூடுதல் வாக்குகளைப் பிரிக்கும் என்பதால் வெற்றி பெறுபவரின் வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

முதல் தலைமுறை வாக்காளா்கள், இளைஞா்களின் வாக்குகளை மநீமவுடன் சோ்ந்து நாம் தமிழா் கட்சியும் பெறுவதற்குக் காத்திருக்கிறது. நடிகா் மன்சூா் அலி கானுக்கு கிடைக்கும் வாக்குகள் சதவிகித கணக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது என நம்பலாம்.

2016 தோ்தல் நிலவரம்

அதிமுக வெற்றி

வாக்கு வித்தியாசம் - 64,041

எஸ்.பி.வேலுமணி (அதிமுக) - 1,09,519

கோவை செய்யது (மமக) - 45,478

கருமுத்து தியாகராஜன் (பாஜக) - 19,043

கே.தியாகராஜன் (தேமுதிக) - 7,968

ஏ.அன்சாா் ஷெரீப் (எஸ்.டி.பி.ஐ.) - 3,643.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com