/

முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம்: 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வரை 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:11 pm

DIN

கோவை மாவட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வரை 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அளவில் அதிக அளவு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களின் பட்டியலில் கோவை மாவட்டம் 2 ஆவது இடத்தில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணை தடுப்பூசி 98 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை 84 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்களில் 1.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம்தேதி தொடங்கியது. ஜனவரி 31ஆம் தேதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வரை 30 ஆயிரத்து 236 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:

கரோனா 3ஆவது அலையில் சுகாதாரப் பணியாளா்கள் அதிகளவிலோனா் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதனால் ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் தொடா்ந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே முதல் தவணை, இரண்டாவது தவணை, முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளுக்கு காத்திருப்பவா்களும், 15 முதல் 18 வயதிற்குள்பட்ட சிறுவா்களும் தவறாமல் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.