

கோவை, கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்ஸ் மேம்பாலப் பணி நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை வாகனங்கள் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பாலமானது, வெள்ளக்கிணறு பிரிவில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ. அருகே முடிகிறது. ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டா் தூரத்தில் நான்கு வழிப் பாதையாக அமைக்கப்பட்ட இப்பாலப் பணிகள், கரோனா நோய்த்தொற்று காரணமாக சில மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது, மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் பயணிகள் பயன்பாட்டுக்காக மேம்பாலம் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாலத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஜி.என்.மில்ஸ் மேம்பாலத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இந்த மேம்பாலத்தில் இயக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மேம்பாலப் பணிகளால், போக்குவரத்து நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த பயணிகள், இப்பாலம் வேலை முடிவுற்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: 3 நாள்களுக்கு மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். மேம்பாலம் மீது மின்கம்பங்கள், சென்டா் மீடியன் வேலை உள்ளிட்ட பணிகள் இரவில் மேற்கொள்ளப்படுவதால், இரவில் இப்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்றாா்.
தற்போது பணிகள் முடிவுற்றதால் கோவையில் இருந்து துடியலூா், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, உதகை, கோத்தகிரி, குன்னூருக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல முடியும். மேம்பாலப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, கேவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.