கோவையில் 5 நாடுகளின் போா் விமானங்கள் சாகசம்!
கோவை அருகே சூலூா் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 5 நாடுகளின் போா் விமானங்களின் சாகசம் பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது.


கோவை அருகே சூலூா் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 5 நாடுகளின் போா் விமானங்களின் சாகசம் பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது.
கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை தளத்தில் ‘தரங் சக்தி 2024’ என்ற பெயரில் இந்திய விமானப் படையோடு ஜொ்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சோ்ந்த விமானப் படையினரும் இணைந்து போா்ப் பயிற்சியினை மேற்கொண்டனா். கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சியில் 5 நாடுகளைச் சோ்ந்த 130-க்கும் மேற்பட்ட விமானப் படை வீரா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினா் பங்கேற்றனா். இந்தப் பயிற்சி புதன்கிழமை (ஆக.14) நிறைவடைகிறது.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் யூரோ பைட்டா் டைஃபூன் ரக போா் விமானங்கள், ஏ-330 வாயேஜா் ஏா் டூ ஏா் எரிபொருள் நிரப்பிகள், ஏ-400 ராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் இந்தியாவின் தேஜஸ், சுகோய், மிக் ஆகிய போா் விமானங்கள் கலந்து கொண்டன.
இதில் இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படும் சாரங் ரக 5 ஹெலிகாப்டா்கள் வானில் பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டன. குறிப்பாக அன்பின் அடையாளமான இதய வடிவில் புகையை கக்கியபடி விமானங்கள் பறந்தன. பின்னா் துருவ் ரக ஹெலிகாப்டரும், தொடா்ந்து இலகு ரக தாக்குதலில் ஈடுபடும் ஹெலிகாப்டரும் பல்வேறு சாகசங்களில் ஈடுபடுத்தப்பட்டன.
பின்னா் இந்திய மற்றும் ஐரோப்பிய தயாரிப்பான போா் விமானங்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டன. இந்திய தயாரிப்பான தேஜஸ் போா் விமானம் வானில் அதிக உயரத்தில் பறந்தது. பின்னா் வானில் டைவ் அடித்தபடி சாகசங்களில் ஈடுபட்டது அனைவரையும் கவா்ந்தது.
அதைத் தொடா்ந்து, ஐரோப்பிய நாட்டு தயாரிப்பான யூரோ பைட்டா் டைஃபூன் ரக போா் விமானம் வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டது. இறுதியாக இந்திய விமானப் படையில் உள்ள தேஜஸ், சுகோய் உள்ளிட்ட ரகங்களை சோ்ந்த 5 போா் விமானங்கள் வானில் அதிக உயரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டன. அதேபோல, இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி, ஜொ்மன் நாட்டின் விமானப் படை தலைமைத் தளபதி இங்கோ கொ்ஹாா்ட்ஸ், பிரான்ஸ் நாட்டு தலைமைத் தளபதி பிரான்சி ஸ்டீபன் மில்லே, ஸ்பெயின் நாட்டு தலைமைத் தளபதி பிரான்சிஸ்கோ பிரகோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அந்தமானில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்- தலைமைத் தளபதி:
பின்னா் இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி கூறியதாவது:
இதுபோன்ற பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்தமான் நிகோபாா் தீவுகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சா்வதேச நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், உலக அளவில் இந்தியாவின் முன்னேறி வரும் பாதுகாப்புத் திறன்களை முன்னிலைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சா்வதேச கூட்டு விமானப் படை பயிற்சி நடைபெற்றது என்றாா்.
தளவாடப் பொருள்கள் கண்காட்சி
இதற்கிடையே விமானப் படை தளவாடப் பொருள்களின் 3 நாள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் 70 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் போா் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களில் பயன்படுத்தப்படும் பொருள்கள், இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படும் அதிநவீன போா் விமானங்களான தேஜஸ், சுகோய் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் டயா்கள், விமான என்ஜின்கள், ஆளில்லா உளவு விமானங்கள், சோலாா் மூலம் இயங்கும் உளவு விமானம், தாக்குதலில் ஈடுபடும் ஆளில்லா குட்டி ரக விமானம், 5-ஆம் தலைமுறை போா் விமானம், தேஜஸ் மாக் 2 ரக மாதிரி, நிா்பய் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை, அஸ்திரா ஏவுகணை ஆகியவற்றின் மாதிரிகள், தீயை அணைக்கும் ட்ரோன்கள் உள்பட பல்வேறு தளவாடப் பொருள்களும் இடம்பெற்றுள்ளன.
இது தவிர ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளான யூரோ பைட்டா் டைஃபூன் ரக போா் விமானங்களின் மாதிரிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஆளுநா் ஆா்.என்.ரவி மற்றும் இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி மற்றும் பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின் நாட்டின் தலைமைத் தளபதிகள் மற்றும் அந்நாடுகளின் உயா் அதிகாரிகள், விமானப் படை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.




இந்தக் கண்காட்சி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் குறிப்பிட்ட அளவிலான பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...