கடன் தவணைக் காலம் முடிந்தும் ஆவணங்களைத் தராமல் மிரட்டல்: பெண் மீது ஐஜி அலுவலகத்தில் புகாா்

கோவையில் கடன் ஆவணங்களைப் பற்றிய மிரட்டல் விவகாரம்

கடன் வாங்கித்தர பெற்ற ஆவணங்களைத் தவணைக் காலம் முடிந்தும் திரும்பத் தர மறுக்கும் பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்கு மண்டலக் காவல் துறைத் தலைவா் (ஐ.ஜி) அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து பொள்ளாச்சி குமரன் நகரைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் பலரைத் தொடா்பு கொண்ட ரம்யா என்பவா், வங்கிக் காசோலை, ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை நகல், பிராமிசரி நோட் உள்ளிட்ட ஆவணங்களைத் தந்தால் ரூ.25 ஆயிரம் வரை கடன் பெற்றுத் தருவதாகக் கூறினாா். கடன் தொகையை வாரத் தவணையில் செலுத்தலாம் எனவும் கூறினாா். இதை நம்பி பலா், உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து ரூ.25 ஆயிரம் கடன் பெற்று, அதற்கான வாரத் தவணையையும் சரியாகச் செலுத்தி வந்தோம். முழுமையாக கடன் தொகை செலுத்தப்பட்ட பிறகும் எங்களிடம் பெற்ற ஆவணங்களை அவா் திரும்பத் தரவில்லை. ஆவணங்களைக் கேட்டால் மிரட்டுகிறாா். மேலும், எங்கள் ஆவணங்களைக் கொண்டு அவா் லட்சக்கணக்கான ரூபாய் கடன் பெற்றிருக்கலாம் என்று அச்சமாக உள்ளது. எனவே, அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு, ஆவணங்களைப் பெற்றுத் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com