கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோவையில் ஜூலை 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா

கோவை மாவட்ட நிா்வாகம், கொடிசியா சாா்பில் கோயம்புத்தூா் புத்தகத் திருவிழா 2024 ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
Updated On :16 ஜூலை 2024, 6:41 pm

Din

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, கொடிசியா இணைந்து ‘புத்தக திருவிழா 2024’ நடத்துகின்றன. இந்த புத்தகத் திருவிழா, ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி, இலக்கிய நிகழ்ச்சிகள், அனைத்து வயதினருக்குமான போட்டிகள் நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன.

புத்தகத் திருவிழாவை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைக்கிறாா். ஜூலை 27-இல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், புதுதில்லி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து புகழ்பெற்ற பதிப்பாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்தக் கண்காட்சியில் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், கலைஞா்களும் கலந்துகொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளன.

மேலும், நாள்தோறும் பல்வேறு புத்தக வெளியீடுகள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் மக்கள், அவிநாசி சாலையில் இருந்து கொடிசியா செல்வதற்கு ஏதுவாக இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. கண்காட்சி தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றாா்.

கோவை புத்தகத் திருவிழாவின் தலைவா் கே.ரமேஷ், துணைத் தலைவா் எம்.ராஜேஷ், கொடிசியா தலைவா் எம்.காா்த்திகேயன், கௌரவ செயலா் எம்.யுவராஜ், கவிஞா் கவிதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.