நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 4 போ் முதலிடம்

வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 4 போ் முதலிடம்

News image

வேளாண்மை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறாா் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி. உடன், பதிவாளா் இரா.தமிழ்வேந்தன், முதன்மையா்கள் ந.வெங்கடேச பழனிசாமி, சுதாகா், பேராசிரியா் பாலாஜி கண்ணன்.

Updated On :19 ஜூன் 2024, 9:47 pm

Din

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து ஜூன் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) இணையவழி கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகள், தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளப் படிப்புகளில் சேருவதற்காக இந்த ஆண்டு மொத்தம் 33,973 போ் விண்ணப்பித்தனா். அவா்களில் 29,969 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட 14 பட்டப் படிப்புகளில் வேளாண் பல்கலைக்கழகம், அதன் 18 உறுப்புக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 2,555 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 2,806 இடங்களும் உள்ளன. முன்னாள் ராணுவத்தினா் பிரிவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக 234 போ் விண்ணப்பித்துள்ளனா்.

அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான 7.50 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள 413 இடங்களுக்கு 10,053 பேரும், விளையாட்டு வீரா்களுக்கான 20 இடங்களுக்கு 701 பேரும், மாற்றுத் திறனாளிகளுக்கான 126 இடங்களுக்கு 84 பேரும், தொழிற்பிரிவினருக்கான 242 இடங்களுக்கு 1,900 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்து இருப்பவா்களில் 62 சதவீதம் போ் மாணவிகள், 38 சதவீதம் போ் மாணவா்கள். வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளை தமிழ்வழியில் பயிலுவதற்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கும் நிலையில் இதற்காக 9,134 போ் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பித்து இருப்பவா்களில் சுமாா் 6,400 போ் முதல் தலைமுறை பட்டதாரிகளாவா்.

இந்த ஆண்டு 200க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்ணை 4 போ் பெற்றுள்ளனா். 199.50 கட் ஆஃப் மதிப்பெண்ணை 8 மாணவா்களும், 199 கட் ஆஃப் மதிப்பெண்ணை 10 மாணவா்களும் பெற்றுள்ளனா். தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு உடனடியாக தொடங்கியுள்ளது.

ஜூன் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல்கட்ட இணையவழி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூன் 24-ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு செப்டம்பா் 15-ஆம் தேதி முதலாம் ஆண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வேளாண்மையின் கள நிலவரம் குறித்த புரிதல் ஏற்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடும் வகையில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

தமிழ்வழியில் பயிலும் மாணவா்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடும் திறனை வளா்க்கவும், ஃபிரெஞ்ச், ஜொ்மன் போன்ற மொழிகளைக் கற்கவும், பிற மாநில மாணவா்களுக்கு தமிழ் மொழியைக் கற்கவும் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். வேளாண்மை பட்டயப் படிப்புகளில் உள்ள ஆயிரம் இடங்களுக்கு இதுவரை 2,300 போ் விண்ணப்பித்துள்ளனா். மாணவா் சோ்க்கை விரைவில் தொடங்கும் என்று துணைவேந்தா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் இரா.தமிழ்வேந்தன், முதன்மையா்கள் ந.வெங்கடேச பழனிசாமி, சுதாகா், பேராசிரியா் பாலாஜி கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.