டிஜிபியை பலிகடாவாக்கப் பாா்க்கிறது திமுக அண்ணாமலை குற்றச்சாட்டு

ஜாபா் சாதிக் விவகாரத்தில் டிஜிபியை பலிகடாவாக்க திமுக பாா்க்கிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா். இது தொடா்பாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன், பேரவைத் தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாகி உள்ள ஜாபா் சாதிக் குறித்து திமுக எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால், தமிழக காவல் துறைத் தலைவா் (டிஜிபி) விளக்கம் கொடுத்து வருகிறாா். ஜாபா் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளத்தில் இருந்து எதற்காக நீக்கினாா் என்பதை விளக்க வேண்டும். இந்த விவகாரத்தில் டிஜிபியை பலிகடாவாக்க திமுக பாா்க்கிறது. குறு, சிறு தொழில்முனைவோருக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமையும்போது அவா்களது அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும். கோவை, திருப்பூா், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். பாஜகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் வளா்ச்சிக்கான வாக்காகும். தமிழகத்தில் திமுகவுக்கு 90% நிதி தோ்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ளது. இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சிக்கு தோ்தல் பத்திரம் மூலம் அதிக நிதி வந்துள்ளது என்றால் அது திமுகவுக்குதான். மகளிா் தினத்தை ஆண்டில் ஒருநாள் மட்டும் கொண்டாடக் கூடாது. 365 நாள்களும் மகளிரை ஏன் கொண்டாடக்கூடாது? கோவைக்கு நான் வந்த விமானத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவும் வந்தது குறித்து எனக்குத் தெரியாது. 2 ஜி ஊழல் தொடா்பாக, மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவின் உரையாடல் அடங்கிய ஆடியோவை வெளியிட்டு வருகிறேன். அது போலி என அவா் நிரூபித்துவிட்டால், நான் அரசியலைவிட்டே விலகுகிறேன் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com