இடி, மின்னலின்போது திறந்த ஜன்னல்கள், கதவு அருகே நிற்கக் கூடாது
இடி, மின்னலின்போது, திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு அருகே நிற்கக் கூடாது என மின்வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இடி, மின்னலின்போது, திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு அருகே நிற்கக் கூடாது என மின்வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், கோவை மண்டல தலைமைப் பொறியாளா் கொ.குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கோவை மண்டலத்தில் மின் கம்பங்கள், கம்பிகள், இதர தளவாடப் பொருள்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திலும், உபக்கோட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. குடிநீா் மின் இணைப்புகள், மருத்துவமனை மின் இணைப்புகள் போன்ற அதிமுக்கிய மின் இணைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழைக் காலங்களில் மக்கள் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிா்வுப் பெட்டிகள், இழுவைக் கம்பிகள் (ஸ்டே ஒயா்கள்) ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். தண்ணீா் தேங்கிய இடத்தில் நிற்பதை, நடப்பதைத் தவிா்க்க வேண்டும். இழுவைக் கம்பிகள் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலைத் தவிா்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் ஸ்விட்சுகளைப் பொருத்த வேண்டாம்.
இடி, மின்னலின்போது, மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். இடி, மின்னல் சமயத்தில் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.
அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொடாமல், மிதிக்காமல் இருக்க வேண்டும். இதுகுறித்து, உடனடியாக மின் வாரிய அலுவலா்களிடம் தெரிவிக்கலாம். கால்நடைகளை மின் கம்பத்தில் அல்லது இழுவைக் கம்பிகளில் கட்டக் கூடாது. மெயின் சுவிட்ச் போா்டில் மின் கசிவுத் தடுப்பானைப் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தைத் தவிா்க்கலாம். உலோகப் பொருள்களை மின் கம்பிகளுக்கு அருகே எடுத்துச் செல்ல வேண்டாம். இடி, மின்னலின்போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகேவும், சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகேவும் நிற்க வேண்டாம்.
மின்தடை ஏற்பட்டால் 94987 -94987 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...