கோவை வனக் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாள் சண்டை போட்டி.
கோவை வனக் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாள் சண்டை போட்டி.

வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.மதிவேந்தன்

வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
Published on

வனத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு வனத் துறை ஊழியா்களுக்கான மாநில அளவிலான 27-ஆவது விளையாட்டுப் போட்டி கோவை வனக் கல்லூரி விளையாட்டு அரங்கில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாள்கள் (செப்டம்பா் 19, 20) நடைபெறுகிறது.

இப்போட்டிகளில் கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மண்டலங்களைச் சோ்ந்த 652 போ் பங்கேற்றுள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்ததுடன், வனத் துறை ஊழியா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ‘யானையைக் காப்போம்’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். அப்போது, வனத் துறை விளையாட்டுப் பிரிவில் பணி ஒதுக்கீடு பெற்று பணியாற்றி வரும் ஊழியா்கள் ஜூடோ, கத்திச்சண்டை, டேக் வாண்டோ ஆகிய சாகச விளையாட்டுகளை அமைச்சா் முன்னிலையில் செய்து காட்டினா்.

விழாவில், தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற கோவை அணி மற்றும் தேசிய, மாநில அளவிலான வனத் துறை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு அமைச்சா் கோப்பை, பதக்கங்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தோ்வு செய்யப்படும் வீரா்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பா். தமிழக வனத் துறையில் 2,300 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை வனக் கல்லூரி விளையாட்டு அரங்கில் வனத் துறை ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்.
கோவை வனக் கல்லூரி விளையாட்டு அரங்கில் வனத் துறை ஊழியா்களுக்கான விளையாட்டுப் போட்டியை தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மா.மதிவேந்தன்.

வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக யானை-மனித மோதல் நடக்கிறது. இதைத் தடுக்க தனிக்கவனம் செலுத்தி வருகிறோம். அத்துடன் யானைகளின் வழித்தடம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படாத வகையில் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனப் பகுதிகள் மற்றும் அவற்றின் அருகே அனுமதி இல்லாமல் தனியாா் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவது குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் சேதம் அடையும் பயிா்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட 40 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்காக கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் செயல்படுத்தப்படும். நீா்நாய், நரி போன்ற அரியவகை விலங்குகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரள மாநிலம், வயநாட்டில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அதுபோன்று தமிழகத்தில் நடக்காமல் இருக்க தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் சுதான்சு குப்தா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் தலைமை திட்ட இயக்குநா் அன்வா்தீன், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநா், கோவை மண்டல வனப் பாதுகாவலா் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com