வால்பாறை நகராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த உறுப்பினா்கள்
வால்பாறை நகராட்சிக் கூட்டத்தை பெரும்பாலான உறுப்பினா்கள் புறக்கணித்த நிலையில் 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்றனா்.
தமிழக அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்யும் நோக்கில் நகராட்சிக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கான தீா்மானங்கள் நிறைவேற்றினாலும், சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநரிடம் இருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வால்பாறை நகராட்சிக் கூட்டத்தில் பல வளா்ச்சிப் பணிகளுக்காக கடந்த ஓராண்டாக தீா்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடா்ந்து உறுப்பினா்கள் புகாா் தெரிவித்து வருவதோடு கடந்த மாதம் நகராட்சி அலுவலகம் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் வால்பாறை நகராட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தாா். ஆணையா் விநாயகம், துணைத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தமுள்ள 19 உறுப்பினா்களில் திமுகவினா் உள்பட 13 உறுப்பினா்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனா். 6 உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், திருப்பூா் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநரிடம் உரிய அனுமதி பெற்று மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் பராமரிப்புப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்வது என்ற தீா்மானம் மட்டும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.