ஓட்டுநருக்கு மாரடைப்பு: காா்கள் மீது மோதிய லாரி

Published on

கோவையில் பயணத்தின்போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி 3 காா்கள் மீது மோதியது.

கோவை, பேரூா் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). லாரி ஓட்டுநரான இவா், உதவியாளா் இளையரசு என்பவருடன் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நிறுவனத்துக்கு சிலிக்கான் பாரத்தை ஏற்றிக்கொண்டு லாரியில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அங்கு பாரத்தை இறக்கிவிட்டு துடியலூா்-சரவணம்பட்டி சாலை சந்திப்பு அருகே வந்தபோது, குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த 3 காா்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதையடுத்து, இளையரசு துரிதமாக செயல்பட்டு லாரி பிரேக்கை அழுத்தியுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா், குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com