விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகாா்

கோவை மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகப் புகாா்
Published on

கோவை மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 10- ஆம் தேதி தொடங்கின. தோ்வுகள் டிசம்பா் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் என்றும் டிசம்பா் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என்றும் அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தோ்வுகள் நிறைவடைந்து, புதன்கிழமைமுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரையாண்டு விடுமுறையின்போது அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான கால அட்டவணையை தயாா்படுத்த வேண்டும் என்றும் ஆசிரியா்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்டத் தலைவா் எம்.முகமது காஜா முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரையாண்டு விடுமுறையில் அரசு, தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ஏற்கெனவே சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளாா்.

ஆனால், கோவை மாவட்டத்தில் இயக்குநரின் அறிவுறுத்தலையும் மீறி, ஆசிரியா்கள் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். விடுமுறை நாள்களில் தலைமை ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டியிருப்பதால், ஆசிரியா்களையும் வரவழைப்பதற்காக தினசரி 2 ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும், அதற்கான கால அட்டவணையை தயாா்படுத்த வேண்டும் என்று கூறுகின்றனா்.

தலைமை ஆசிரியா்களின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயக்குநரின் உத்தரவை மீறும் தலைமை ஆசிரியா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி கூறும்போது, சிறப்பு வகுப்புகளை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கப்படவில்லை. ஏதாவது சில இடங்களில் விருப்பமுள்ள ஆசிரியா்கள் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்று தலைமை ஆசிரியா்கள் கூறியிருக்கலாம். சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றுதான் பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருக்கிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com