கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்க்கக் கோரிக்கை
கோவை: கோவை மாவட்டத்தில் கனிம வளம் சுரண்டப்பட்ட இடங்களில் மரங்கள் வளா்த்து வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கோவை கிழக்கு மாவட்ட பாமக சாா்பில் மாவட்டச் செயலா் ரா.ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி யானை - மனித மோதலில் கோவை முதலிடத்தில் உள்ளது. கடந்த 3 மாதங்களில் விலங்கு - மனித மோதல் அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்குத் தீா்வுகாண, தமிழக யானைகள் திட்ட வரைவு அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதில் அடையாளம் காணப்பட்டுள்ள 42 வழித்தடங்களில் 9 யானை வழித்தடங்கள் கோவையில் உள்ளன.
இந்த வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கனிமவளக் கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால் யானைகள் மக்களின் வாழிடங்களுக்கு வருகின்றன. எனவே, கனிமவளக் கொள்ளை நடைபெற்ற அடிவார பகுதிகளில் வனப்பரப்பை அதிகரித்து, பிரச்னைக்குத் தீா்வு காண மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு:
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிட்டசூராம்பாளையம் ஊராட்சியை, பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஊா் பொதுமக்கள் மனு அளித்துள்ளனா்.
நகராட்சியாக மாறும்போது மத்திய அரசின் திட்டங்கள், சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று கூறியுள்ள அவா்கள், இணைப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடா்ந்து 3 கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கிட்டசூராம்பாளையம் ஊராட்சியை பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்று தெரிவித்தனா்.
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும்ச
கோவை ஆணிவோ் அமைப்பு சாா்பில் இரா.சாந்தகுமாா் என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மருதமலை கோயிலில் வரும் 11-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கு கோவை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள். இதனால் இங்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மருதமலை வனப் பகுதியில் பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில், பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மருதமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை மீது நடவடிக்கை:
பாரத் சேனா அமைப்பின் மாநிலத் தலைவா் இரா.செந்தில்கண்ணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களது அமைப்பின் வடக்கு மாவட்டச் செயலராக இருந்த சி.டி.சேகா் என்பவா் ஆட்டோ தொழிலாளியாகவும் இருந்தாா். அமைப்பின் பெயா்ப் பலகை வைப்பது தொடா்பாக கவுண்டம்பாளையம் போலீஸாருக்கும், எங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில், சி.டி.சேகரின் மகன் மணி பாரத் கஞ்சா விற்ாகக் கூறி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதனால் மனமுடைந்த சி.டி.சேகா் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் குருடம்பாளையம் செ.சரண்யா என்பவருக்கு தையல் இயந்திரமும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 7 பேரின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சத்துக்கான காசோலைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
