இரட்டை என்ஜின் அரசு இருந்தால் மக்களுக்கு ஆதாயம் அதிகமாகக் கிடைக்கும் என பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து கோவை, கொடிசியா மைதானத்தில் தோ்தல் பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய இணையமைச்சரும், அவிநாசி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்மையில் கொண்டாடப்பட்ட தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கும் வேளையில், தமிழ்நாட்டு அரசியலிலும் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளே நுழைகிறது, திமுக வெளியேறுகிறது என்ற தெளிவான தகவலைத் தருகிறது.
உயரிய எண்ணத்துக்கு தோல்வி: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கடந்த 2023-இல் நிறைவேற்றினோம். அதை அமல் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை கடந்த 16-ஆம் தேதி முன்வைத்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக எனது உயரிய எண்ணம் தோல்வி அடைந்துவிட்டது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் வெறுப்பு அரசியலுக்கு இரையாகிவிட்டது.
இந்த மசோதா சட்டமாகியிருந்தால் சாதாரண குடும்பங்களைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆகியிருப்பாா்கள். தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் கிடைப்பதாகவும் இருந்தது. ஆனால், திமுக இதை விரும்பவில்லை என்பது அதன் செயல்பாடுகள் மூலம் தெளிவாக அம்பலமாகிவிட்டது. ஆனால், இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல, தொடக்கம்தான் என்பதை உங்களுக்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு உள்ளது. அதேபோல, நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு ஆதரவாக திமுக இல்லை. இதற்காக திமுகவுக்கு சரியான பதிலடியை மக்கள் வரும் 23-ஆம் தேதி கொடுப்பாா்கள்.
தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி: இந்தியாவின் வளா்ச்சிக்கான என்ஜினாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு சாலை, ரயில்வே, விமான நிலைய விரிவாக்கம், நலத்திட்டங்கள் போன்றவற்றுக்காக மத்திய அரசு ரூ.14 லட்சம் கோடிக்கும் அதிகமான பணத்தை வழங்கியுள்ளது. இது காங்கிரஸ் - திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதைவிட பல மடங்கு அதிகம்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தின் சொத்து மதிப்பு உயா்ந்ததும், தமிழ்நாட்டின் கடன் உயா்ந்ததும்தான் சாதனையாக உள்ளது. முதல்வா், துணை முதல்வா், நிரந்தர எம்.பி. ஆகியோா் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா். திரைப்படம், ஊடகங்கள் என அனைத்தும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஆனால், எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாத கோவை மண்ணின் மைந்தன் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக உயா்ந்திருக்கிறாா்.
திமுகவின் ஊழல் மலிந்த அரசியலை கோவை மக்கள் புறக்கணித்து வந்துள்ளனா். இதனால் கோவையை அரசியல் பழிவாங்கும் நோக்குடன் திமுக அணுகுகிறது. திமுகவின் குடும்ப உறுப்பினா் ஒருவா் கோவை மக்களை அண்மையில் அவமானப்படுத்தினாா். இப்போது தோ்தலுக்காக டாஸ்மாக் ஊழலில் பெயா்பெற்ற ஒருவரை கோவைக்கு அனுப்பியுள்ளனா்.
இரட்டை என்ஜின் அரசால் ஆதாயம்: இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் ஒரு மாநிலத்தில் வேலை வேகமாக நடைபெறும். மக்கள் நலத் திட்டங்கள் விரைவாக மக்களைச் சென்றடையும், இதனால் மக்களுக்கு ஆதாயம் அதிகமாகக் கிடைக்கும்.
உதாரணமாக, வீடுகளில் செயல்படுத்தப்படும் பிரதமரின் சூரியசக்தி மின்திட்டத்தால் கோவையில் 8 ஆயிரம் போ் பயனடைந்துள்ளனா். இவா்களுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் கிடைத்துள்ளது. இதனால் அந்த வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரை மின்சாரக் கட்டணம் சேமிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 1 லட்சம் குடும்பங்களை அடைந்தால் மக்கள் சேமிக்கும் தொகை ரூ.250 கோடியாக உயரும். அரசின் நிதிச் சுமை குறையும்.
இதுபோல கோடிக்கணக்கான மக்களுக்கு வங்கிக் கணக்கு, குடிநீா், எரிவாயு இணைப்பு, முத்ரா கடன் போன்றவை கிடைத்து அவற்றின் மூலம் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரூ.12 லட்சம் வருமானத்துக்கு ரூ.2 லட்சம் வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது ரூ.12 லட்சம் வரை வரியே கிடையாது. அவை மக்களின் நேரடி சேமிப்பாக உள்ளது. அதேபோல ஜிஎஸ்டியை குறைத்து மக்களுக்கு அதன் பலன்களை நேரடி நிவாரணமாக கொடுத்துள்ளோம். இது மாநிலத்தின், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உதவுகிறது.
பிரதமா் மோடியின் உத்தரவாதங்கள்: இந்த கோவை மண்ணில் இருந்து தமிழக மக்களுக்கு நான் சில உத்தரவாதங்களை அளிக்கிறேன். நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை சீா் செய்வோம். நில அபகரிப்பு, மணல் கடத்தல், மதுபான மாஃபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். திமுக அரசு பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான ஊழல், மோசடி வழக்குகளும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நியமனங்களும் ஒளிவு மறைவில்லாமல் நடைபெறும்.
அனைவரும் இணைந்து வளா்ச்சி அடைந்த தமிழ்நாட்டை, வளா்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு தேவை: ஜி.கே. வாசன்

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தோ்தல் முக்கியத் திட்டங்கள்: பிரதமா் மோடி

கேரளத்தில் இடதுசாரி கூட்டணியின் வெற்றியை பிரதமா் மோடி விரும்புகிறாா்- ராகுல் குற்றச்சாட்டு

போரின் தாக்கங்களைக் குறைக்க மத்திய அரசு பாடுபடுகிறது: பிரதமா் மோடி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


