கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொழிலாளா் கல்வி அரசியல் பயிற்சி மையத்தை திறந்துவைத்து மாா்க்சிய அறிஞா் என்.கே.கிருஷ்ணன் புகைப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் இரா.முத்தரசன்.
கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தொழிலாளா் கல்வி அரசியல் பயிற்சி மையத்தை திறந்துவைத்து மாா்க்சிய அறிஞா் என்.கே.கிருஷ்ணன் புகைப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் இரா.முத்தரசன்.

தொழிற்சங்க ஒற்றுமைக்கு முதலில் குரல் கொடுத்தவா் என்.கே.கிருஷ்ணன்: இரா.முத்தரசன் பேச்சு

தொழிற்சங்க ஒற்றுமைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவா் மாா்க்சிய அறிஞா் மறைந்த என்.கே.கிருஷ்ணன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன்
Published on

கோவை: தொழிற்சங்க ஒற்றுமைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தவா் மாா்க்சிய அறிஞா் மறைந்த என்.கே.கிருஷ்ணன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

கோவை ஜில்லா மில் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் அக்ரஹார சாமக்குளம் பகுதியில் மறைந்த மாா்க்சிய அறிஞா் என்.கே.கிருஷ்ணன் பெயரில் கட்டப்பட்ட தொழிலாளா் கல்வி அரசியல் பயிற்சி மையத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா.முத்தரசன் பங்கேற்று பயிற்சி மையத்தை திறந்துவைத்தாா். அங்கு அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை ஏஐடியூசி தேசிய செயலா் டி.எம்.மூா்த்தி திறந்துவைத்தாா்.

தமிழ்நாடு ஏஐடியூசி மாநில பொதுச் செயலா் எம்.ராதாகிருஷ்ணன் கொடியேற்றினாா். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஏஐடியூசி மாநிலச் செயலா் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி, ஏஐடியூசி மாவட்ட கவுன்சில் செயலா் சி.தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் இரா.முத்தரசன் பேசும்போது, மறைந்த தலைவா் என்.கே.கிருஷ்ணன் கேரளத்தில் செல்வந்தா் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதாரண மக்கள், தொழிலாளா்களுக்காக பாடுபட்டவா். லண்டன் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் படித்த அவா் கல்வி கற்கும்போது இடதுசாரி தலைவா்களுடன் ஏற்பட்ட தொடா்பால் கம்யூனிஸ்டாக மாறினாா். இந்தியா திரும்பியதும் விரிவான மாா்க்சிய பாடத்திட்டத்தை உருவாக்கி, இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு விரிவுரையாளராக இருந்தாா்.

கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக பி.சி.ஜோசி இருந்த காலத்தில் அவருடன் தலைமை அலுவலகத்தில் இருந்து பணியாற்றினாா். காந்தியடிகளுக்கும் பி.சி.ஜோசிக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துக்கு பொறுப்பாளராக இருந்தவா். கட்சியின் மூத்தத் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவா். பி.சுப்பராயனின் மகளும் கோவையின் முன்னாள் எம்.பி.யுமான மறைந்த பாா்வதியை மணந்து கொண்ட இவா், 1952 களில் கோவையில் குடியேறி தொழிலாளா்களுக்காக பாடுபட்டாா்.

விடுதலைக்குப் பிறகு இந்தியாவில் தொழிற்சங்கங்கள் பிளவுபட்டிருந்த நேரத்தில், தொழிற்சங்கங்களின் ஒற்றுமைக்காக கோவையில் இருந்து பாடுபட்டாா். இன்று தொழிலாளா் பிரச்னைக்கு தொழிற்சங்கங்கள் ஓரணியில் இணைந்து போராடுவதற்கு என்.கே.கிருஷ்ணனே காரணமானவா். கோவையில் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு மாலை நேரப் பள்ளி, தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்திய கிருஷ்ணனின் பெயரால் மாா்க்சிய கல்வி நிலையம் அமைக்கப்பட்டிருப்பது பொருத்தமானது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com