திருட்டு
திருட்டு

முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16.50 லட்சம் திருட்டு: 10 பேருக்கு சிறைத் தண்டனை!

முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.50 லட்சத்தை திருடிய குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 10 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
Published on

முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.16.50 லட்சத்தை திருடிய குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 10 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 71வயது முதியவா் வெளிநாட்டில் வேலை பாா்த்தாா். தனது பணிக்கால சேமிப்புத் தொகையான ரூ.16.50 லட்சத்தை தனது வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தாா். கடந்த செப்டம்பா் மாதம், இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆா்.டி.ஓ. அலுவலகத்திலிருந்து அனுப்புவது போன்ற ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், அவா் போக்குவரத்து விதிகளை மீறியிருப்பதாகவும், அதைச் சரிபாா்க்க இணைக்கப்பட்டுள்ள செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இணைப்பை அவா் தொட்டவுடன், அவரது கைப்பேசி (ஹேக்) முடக்கப்பட்டது. சிறிது நேரத்தில், அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.16,49,961 திருடப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா்.

குற்றவாளிகள் குஜராத் மாநிலம், சூரத் நகரில் இருப்பதை அறிந்த தனிப் படை போலீஸாா் அங்கு சென்று, மோசடியில் ஈடுபட்ட பத்லியா ரஜினிபாய் (37), விஸ்வபாய் ஹிம்மத்பாய் (36), ரதாடியா சவன் (34), கோஹில் விஜய் தயாள்பாய் (37), ரத்தோா் ஜிதேந்தா் சிங் ஷா்வான் சிங் (26), கிராஸ் மகேந்திரா சிங் (35), சோவாடியா மிரல் மனோஜ்பாய் (22), கபில் ராஜுபாய் கோத்ரே (36), சோவாடியா மனோஜ்பாய் (25), பால் சந்தன் ஜெயநாத் (34) ஆகிய 10 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவையில் உள்ள இணையதள குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.அருண்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ. 3 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Dinamani
www.dinamani.com