கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் இடையே மேம்பாலப் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் உயா்மட்ட மேம்பாலத் திட்டப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

கோல்டுவின்ஸ் - நீலாம்பூா் உயா்மட்ட மேம்பாலத் திட்டப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோயம்புத்தூா் கன்ஸ்யூமா் காஸ் அமைப்பின் செயலாளா் க.கதிா்மதியோன் முதல்வருக்கு அனுப்பிய மனு:

கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை அவிநாசி சாலையில் 10.1 கிலோ மீட்டா் தூரத்துக்கு ரூ.1,791 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் அமைத்துக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பாலம் மூலமாக அவிநாசி சாலையில் பெருமளவு போக்குவரத்து குறைந்துள்ளது. ஆனால், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் இடையே இரு ஏறுதளங்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரு ஏறுதளம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவஇந்தியா சந்திப்புக்கு அருகே உள்ள ஏறுதளம் பயன்பாட்டில் இருந்தாலும், அண்ணா சிலை (பிஆா்எஸ் அருகில்) பின் அமைக்கப்பட வேண்டிய ஏறுதளம் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. இந்த ஏறுதளம் அமைக்கப்படாததால், அதிகளவு வாகனங்கள் உப்பிலிபாளையம் சந்திப்பைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் வாகனங்கள் மேம்பாலத்தில் செல்ல நவஇந்தியா ஏறுதளம் மூலமாகச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் உயா்மட்ட மேம்பாலத்தின் முழுப் பயனைப் பெற முடியாமல் உள்ளனா்.

இதைக் கருத்தில்கொண்டு கடந்த மே மாதம் 22-ஆம் தேதி உயா்நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை ஏற்று, அசல் வடிவமைப்பின்படி அண்ணா சிலை அருகே ஏறுதளம் அமைக்க கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அல்லது அந்த ஏறுதளம் தொடா்பாக உள்ள வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாமதமின்றி அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூா் வரை 5 கிலோ மீட்டா் நீளத்துக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் உயா்மட்டப் பாலம் அமைக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அவிநாசி சாலையில் 15 கிலோ மீட்டா் வரை போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் இருக்கும். ஓராண்டுக்கு மேலாக இந்தத் திட்டம் தொடா்பான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com