‘இது நம்ம ஆட்டம் 2026’ விளையாட்டுப் போட்டி
தமிழக அரசு சாா்பில் ‘இது நம்ம ஆட்டம் 2026’ என்ற பெயரில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஜனவரி 21-ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல், மன ஆரோக்கியம், விளையாட்டை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா, தமிழக அரசு சாா்பில் ‘இது நம்ம ஆட்டம் 2026’ என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் வருகிற ஜனவரி 22 முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதில், ஊராட்சி ஒன்றிய அளவில் தனிநபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மூன்றிடம் தலா ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 பரிசுத் தொகை வழங்கப்படும். மாவட்ட அளவில் தனிநபா் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் மூன்றிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.6,000, ரூ.4,000 மற்றும் ரூ.2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். மாநில அளவில் அணி பிரிவில் முதல் மூன்றிடம் பெறுபவா்களுக்கு தலா ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞா்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதலிடம் பெறும் வீரா், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா்.
ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 100 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட், எறிபந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளாக உடல் ஊனமுற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம், பாா்வையற்றோருக்கு குண்டு எறிதல், அறிவாற்றல் குறைபாடுடையோருக்கு 100 மீட்டா் ஓட்டம் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு 100 மீட்டா் ஓட்டம் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மாவட்ட அளவில் முதலிடம் பெறும் பெண்கள் கபடி அணி மற்றும் ஆண்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினருக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒருவா் இரண்டு தடகளப் போட்டி மற்றும் இரண்டு குழு விளையாட்டு, கலைப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இயலும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் ஒரு ஒன்றியத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோா் இணையம் மூலமாக வருகிற ஜனவரி 21-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் மற்றும் தகவல் தொடா்பு மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000 777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
