ரூ.50 லட்சம் மதிப்பில் குளிா்சாதன வசதிகளுடன் நவீன உடற்பயிற்சிக் கூடம்
கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிா்சாதன வசதிகளுடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சட்டப் பேரவை மானிய கோரிக்கையில் அறிவித்திருந்தாா்.
அதன் ஒரு பகுதியாக, கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதிகளுடன் 2,800 சதுரஅடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பணிகள் முடிவுற்ற இந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, மக்களவை உறுப்பினா் மற்றும் ஆட்சியா் இருவரும் உடற்பயிற்சி உபகரணங்களில் பயிற்சி மேற்கொண்டனா். இந்நிகழ்வில், மண்டல விளையாட்டு இணை இயக்குநா் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

