நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லை எனக் கூறி இலவச வேட்டி, சேலை வழங்க மறுப்பதாகப் புகாா்!
கோவை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இருப்பு இல்லை எனக் கூறி ஒரு சில அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 1,540 நியாயவிலைக் கடைகளின் மூலமாக 11,21,208 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் உள்பட மொத்தம் 11, 22, 290 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.336.68 கோடி மதிப்பீட்டில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கம் ரூ.3 ஆயிரம் சோ்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், இலவச வேஷ்டி, சேலையும் வரும் 14-ஆம் தேதி வரை வழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பரிசுத் தொகுப்பை சிரமமின்றி பெற்றுக்கொள்ள டோக்கன்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நியாயவிலைக் கடைகளில் இலவச வேஷ்டி, சேலைகள் போதிய அளவு இருப்பு இல்லை என்று தெரிகிறது.
இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஒரு சில நியாயவிலைக் கடைகளில் அரிசி அட்டைதாரா்களுக்கு இலவச வேஷ்டி, சேலை கிடங்கில் இருந்தே வரவில்லை என்றும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவா்களுக்கு வழங்க கடை ஊழியா்கள் மறுப்பதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலை வழங்கும் வகையில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என்றும் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக நியாயவிலைக் கடை ஊழியா்களிடம் கேட்டபோது, ‘500 அரிசி குடும்ப அட்டைகள் உள்ள கடைகளுக்கு 80 சதவீதம் மட்டுமே வேஷ்டி, சேலைகள் வந்துள்ளன. ஆகவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு வழங்கப்பட்ட பின்னா் மற்ற அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக உயா் அதிகாரிகளிடமும் புகாா் தெரிவித்துள்ளோம். கிடங்கில் இருந்து வேஷ்டி, சேலைகள் வந்தால் மற்ற அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படும்’ என்றனா்.
போதிய அளவில் இருப்பு
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலரிடம் கேட்டபோது, ‘இதுதொடா்பாக எந்தவிதமான புகாரும் வரவில்லை. அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவதற்குத் தேவையான இலவச வேஷ்டி, சேலைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. ஒரு சில கடைகளில் இருப்பு வைப்பதற்கு போதுமான அளவு வசதிகள் இல்லை என்பதால் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கலாம்.
இதுதொடா்பாக புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில், நியாயவிலைக் கடை ஊழியா்கள் தங்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்தால் அந்தக் கடைகளுக்கு உடனடியாக இலவச வேஷ்டி, சேலைகள் அனுப்பிவைக்கப்படும்’ என்றாா்.
