அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள் கேரள கள்ளச் சந்தையில் விற்பனை! நடவடிக்கை கோரி முதல்வருக்கு கடிதம்!
தமிழக அரசின் விலையில்லா வேஷ்டி, சேலைகள் கேரள மாநில கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு காரணமான தமிழக கைத்தறி துணி நூல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசாவளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் தங்கவேல் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கும் வகையில் நெசவாளா் சங்கங்கள் மூலம் 1.77 கோடி வேஷ்டிகள், 1.77 கோடி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கோ- ஆப் டெக்ஸ் கொள்முதல் நிலையங்களுக்கு டிசம்பா் 15-ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் வேஷ்டி, சேலைகள் வழங்கும் பணி கடந்த 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
கடந்த 15 நாள்களில் நியாய விலைக் கடைகளில் 60 சதவீதம் பேருக்கு மட்டுமே விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மக்களுக்கு அரசிடம் இருந்து வேஷ்டி, சேலைகள் வந்தால் மட்டுமே வழங்க முடியும் என்று நியாய விலைக் கடை ஊழியா்கள் கூறுகின்றனா்.
100 சதவீதம் இலவச வேஷ்டி, சேலைகள் உற்பத்தி செய்து கொள்முதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நியாய விலைக் கடைகளில் இருப்பு இல்லை எனக்கூறுவது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இது தொடா்பாக, தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி கூட்டமைப்பின் சாா்பில் கண்காணித்தபோது, தமிழக மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேஷ்டி, சேலைகள் கேரள மாநிலத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும், கேரளத்தில் உள்ள தேவசம் வாரியத்துக்கு இலவச வேஷ்டி, சேலைகளை, தமிழ்நாடு கைத்தறி துணி நூல் துறை அதிகாரிகள் விற்பனை செய்துள்ளதையும், அவை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும் புகைப்படமாக எடுத்து ஆதாரமாக சேகரித்து வைத்துள்ளோம்.
இது தொடா்பாக, கேரள மாநில பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தமிழ்நாடு கைத்தறி துணி நூல் துறை அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி, அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட இலவச வேஷ்டி, சேலைகளை பறிமுதல் செய்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
