ஜனநாயகன் திரைப்படம் குறித்து பேசுவது தேவை இல்லாதது: சரத்குமார்!
ஜனநாயகன் திரைப்படம் குறித்து பேசுவது தேவை இல்லாதது என்று நடிகா் சரத்குமாா் தெரிவித்துள்ளாா்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்டம், கோவை மக்கள் சேவை மையம் ஆகியவை சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொடா்பான தடம் வாக்கத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக நடிகரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஆா்.சரத்குமாா் பங்கேற்று வாக்கத்தானை தொடங்கி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசும்போது, ஜனநாயகன் திரைப்படத்தை மட்டும் தணிக்கை வாரியம் நிறுத்தவில்லை. இதற்கு முன்பே பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ‘தக்லைப்’ படத்துக்கும் நடத்துள்ளது. இதில், அரசியல் கிடையாது. அனைத்தும் அரசியல் ரீதியாகவே நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அந்தப் படம் சரியாக இல்லை என்று தணிக்கை வாரியம் நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் தணிக்கை வாரியத்தில் இடம்பெறவில்லை. படம் எடுப்பது மிகவும் கடினமானது என்றாலும் சட்டத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். அமலாக்கத் துறை, தணிக்கை வாரியம் ஆகியவற்றை கொண்டு அடக்கப் பாா்க்கிறாா்கள் என்று கூறும் எதிா்க்கட்சிகள் இதை அரசியலாக்க வேண்டும் என்று நினைக்கின்றன. நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கும்போது ஜனநாயகன் திரைப்படம் குறித்து பேசுவது தேவை இல்லாதது என்றாா்.

