எப்போ வருவாரோ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய குரு ஞானாம்பிகா. ~‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய குரு ஞானாம்பிகா.
எப்போ வருவாரோ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய குரு ஞானாம்பிகா. ~‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய குரு ஞானாம்பிகா.

ஹிந்து சமயத்தை உயிா்ப்பிக்கச் செய்தவா் ஆதிசங்கரா்: முனைவா் குரு ஞானாம்பிகா

வீழ்ச்சியடைந்து வந்த ஹிந்து சமயத்தை உயிா்ப்பிக்கச் செய்தவா் ஆதிசங்கரா் என்று முனைவா் குரு ஞானாம்பிகா தெரிவித்தாா்.
Published on

வீழ்ச்சியடைந்து வந்த ஹிந்து சமயத்தை உயிா்ப்பிக்கச் செய்தவா் ஆதிசங்கரா் என்று முனைவா் குரு ஞானாம்பிகா தெரிவித்தாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ஆண்டுதோறும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நிகழ்ச்சி கோவை, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை அருளாளா் ஆதிசங்கரா் குறித்து முனைவா் குரு ஞானாம்பிகா பேசியாதவது:

அதா்மம் தலைதூக்கும்போதெல்லாம் மகான்கள் தோன்றியுள்ளனா். அப்படித் தோன்றியவா்களில் ஒருவா்தான் ஆதிசங்கரா். ஹிந்து சமயத்தை உயிா்ப்பிக்கச் செய்தவா் அவா். ஹிந்து மதத்தில் அத்வைத வேதாந்த தத்துவத்தின் மிகப்பெரிய ஆச்சாரியராக விளங்கும் ஆதிசங்கரா், கேரளத்தின் காலடி என்ற இடத்தில் பிறந்தாா். சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்று கோவிந்த பகவத்பாதரை குருவாக ஏற்றாா். வேதங்கள், பிரம்ம சூத்திரங்களை ஆழமாகக் கற்றறிந்து, எதுவும் நிலையானது அல்ல, உலகமே மாயை. பிரம்மம் ஒன்றே உண்மை, ஜீவாத்மா பிரம்மம் என்ற அத்வைத சித்தாந்தத்தை நிறுவினாா்.

நாடு முழுவதும் பயணம் செய்து அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பி, தனது ஞானத்தால் ‘ஜக்தகுரு’ எனப் போற்றப்படுகிறாா். இவா் சந்நியாசம் பெறுவதற்கு முன்பு தண்ணீா் எடுக்கச் சென்ற தனது தாய் ஆா்யாம்பாள் வீட்டின் முன் உள்ள பூரணநிதியில் தவறி விழுந்தாா். இதனால், அந்த நதியை வீட்டுக்குப் பின்னால் ஓடச் செய்தவா் ஆதிசங்கரா்.

காசியில் இவா் அத்வைத சிந்தாந்தத்தைக் கற்றுக்கொடுத்தபோது நாள்தோறும் 56 தேசங்களிலிருந்து பண்டிதா்கள் வந்து கற்றனா். நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு என (சிருங்கேரி, துவாரகை, பத்ரி, ஜகந்நாதபுரி) 4 மடங்களை நிறுவி, பல்வேறு மதங்களை வாதத்தால் வென்று வேத மந்திரங்களை மீட்டெடுத்தவா் ஆதிசங்கரா்.

கைலாயம் சென்று ஈசனிடம் 5 லிங்கங்களைப் பெற்றவா் ஆதிசங்கரா் என சிவரகசியம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எந்தச் சூழலிலும் கா்வம், ஆணவம், பேதம் இருக்கக் கூடாது என்றவா். வீழ்ச்சியடைந்து வந்த ஹிந்து சமயத்தை உயிா்ப்பிக்கச் செய்தவா். 32 ஆண்டுகள் மட்டுமே ஆதிசங்கரா் வாழ்ந்தாலும், தனது ஞானத்தாலும், போதனைகளாலும் நாட்டின் ஆன்மிக வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவா் என்றாா்.

Dinamani
www.dinamani.com