பேதங்களுக்கு இடமில்லை: குடியரசு துணைத் தலைவா் பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாளில் எந்த பேதங்களுக்கும் இடமில்லை என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருப்பூா் மற்றும் கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை கோவை விமான நிலையம் வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விவசாய பெருமக்களின் அறுவடைக் காலம் முடிந்த பிறகு ஊரே கூடி மகிழ்ந்திருப்பதுதான் பொங்கல் திருநாள். இதில் எந்த பேதத்துக்கும் இடமில்லை. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். பிற பகுதிகளில் வாழக்கூடிய விவசாய பெருமக்களுக்கு சங்கராந்தி வாழ்த்துகள். நொய்யல் ஆற்றை மீட்டு, புதுப்பித்து எடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம் என்றாா் அவா்.
கோவையில் இருந்து காா் மூலம் திருப்பூருக்குச் சென்ற அவா் அங்கு தனது உறவினா் இல்லத்தில் இரவு தங்கி வியாழக்கிழமை தனது இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறாா். பின்னா் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள உறவினா் இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்டு பின் கோவை செல்கிறாா். பிற்பகல் 2.30 மணியளவில் கோவைக்கு வரும் அவா் சிட்ரா சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்கிறாா். பின்னா் 4.30 மணியளவில் கொடிசியா அரங்கில் நடைபெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா்.
தொடா்ந்து, இரவு 7 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறாா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையையொட்டி, கோவை, திருப்பூா் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் துணைத் தலைவா் வந்து செல்லும் வழித் தடங்களில் ட்ரோன்கள் பறக்க 2 மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையம், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம் ஆகியவை முழுவதுமாக மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவா், மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேற்கு மண்டல ஐ.ஜி. சரவணசுந்தா், மாநகரக் காவல் ஆணையாளா் கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
